சென்னை,
சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூரை முதன்மை இடமாக தேர்வு செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அறிவிக்கப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அந்தத் திட்டத்துக்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் அதன் உரிமையாளர்களிடமே ஒப்படைப்பது குறித்தும் தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சென்னையிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செய்யூரில், மின் திட்டத்துக்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 623 ஏக்கர் நிலமும், 300 ஏக்கர் புறம்போக்கு நிலமும் உள்ளன. இதனால் விமான நிலையம் அமைப்பதற்கான இடமாக செய்யூர் முதன்மையாக தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு மாற்று இடமாக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மணலூர் பகுதியும் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த பகுதி பழவேற்காடு அருகே அமைந்துள்ளதால், சுற்றுச்சூழல் தொடர்பான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மேற்கொள்ளும் சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.