சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) வெளியாவதையொட்டி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்செந்தூருக்கு இன்று அதிகாலை சுமார் 5 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கடலில் இறங்கி வழிபாடு செய்த அவர், மலர்களை சாற்றி முருகனை மனமுருக வேண்டினார்.
கோவிலில் விஜய்க்கு திரிசுதந்திரர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் சார்பாக விஜய்க்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற விஜய் முருகர், வள்ளி, தெய்வானை, சண்முகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், சத்ரு சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களை வணங்கினார். இந்த தரிசனத்தின் போது விஜய் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் ரூட் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஜெகதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர். விஜய் திருச்செந்தூருக்கு வருகை தந்ததை குறித்து கேள்விப்பட்ட ரசிகர்கள், தொண்டர்கள் அதிகாலையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எதிரிகளை வீழ்த்தி தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டி, தவெக சார்பில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது. இந்தநிலையில் திருச்செந்தூரை தொடர்ந்து விஜய்யின் அடுத்த ஆன்மீக பயணம் எங்கே? என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு முன்பு, இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற தவெக தலைவர் விஜய், வரும் 3ஆம் தேதி மராட்டியத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, ‘தி கோட்’ பட ரிலீஸ் மற்றும் தவெகவின் முதல் மாநாடு பணிகளுக்கு நடுவே, சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று விஜய் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
தவெக தலைவர் விஜய் பலமுறை மராட்டியத்தில் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். 2024 ஏப்ரல் மாதம் சாய்பாபா சந்நிதியில் அவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.