தமிழக செய்திகள்

சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகள் மீது விவாதம்..?

சட்டசபையில் தவெக அரசின் முதல் பொதுபட்ஜெட் கடந்த 5-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை

சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகள் மீது விவாதம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள்.

இந்தநிலையில் சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, அதன் பின்னர் சட்டசபை கடந்த 17-ந்தேதி மீண்டும் கூடியது. அது முதற்கொண்டு, பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. பின்னர், இந்த துறைகளின் சார்பில் புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

கவன ஈர்ப்பு தீர்மானம்

தமிழ்நாட்டில் ஹீமோபிலியா (Hemophilia) மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்ட மருத்துவப் பயனாளிகளுக்கு எமிசிஜுமாப் (Emicizumab) என்ற மருந்தை விலையில்லாமல் வழங்க வேண்டியது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் கவனத்திற்கு தவெக எம்.எல்.ஏ. டாக்டர் எம்.எஸ். ரவி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளார்.

அதைபோல பழனி தொகுதி, ஆயக்குடி பேரூராட்சியில் உள்ள அரசு மாணவியர் விடுதிக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டியது குறித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசின் கவனத்திற்கு அதிமுக எம்.எல்.ஏ. கு. ரவி மனோகரன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளார். இந்த இரண்டு தீர்மானங்களுக்கும் அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர்.

டிஜிட்டல் சேவைகள்

இந்நிலையில், சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகள் மீது விவாதம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசியவுடன் அவர்களது கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் டி.கே.பிரபு (இயற்கை வளங்கள்), கீர்த்தனா (தொழில்), குமார் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். மேலும் அவர்கள் துறையின் சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.