சென்னை,
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் இருந்து தெற்கு உள் கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையான நாளை தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நெல்லை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி, சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.