தமிழக செய்திகள்

தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

தென்மேற்கு பருவமழை கேரளம் பகுதிகளில் நேற்று தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்கினாலும், கேரளத்தில் தொடங்குவதையே பருவமழை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அந்தவகையில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் எல்நினோ தாக்கம் காரணமாக பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

முன்கூட்டியே தொடங்கலாம் என கணிக்கப்பட்ட பருவமழை தாமதமாக 4-ந்தேதி அதாவது நேற்று தொடங்குவதாக ஏற்கனவே ஆய்வு மையம், வானிலை ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டது. அதன்படி, தென்மேற்கு பருவமழை கேரளம் பகுதிகளில் நேற்று தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மிக கனமழை

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரளம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளிலும், தமிழ்நாட்டின் மேற்குதொடச்சி மலை மற்றும் அதனையொட்டிய இடங்களில் மழைக்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அதன்படி, தமிழ்நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அதேபோல், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, ஈரோடு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

எல்நினோ தாக்கம்

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இந்தியாவில் இயல்பைவிட குறைவாகவே பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு (2027) ஜூன் வரை சூப்பர் எல்நினோவின் தாக்கம் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்பதாலும் இந்தியா வறட்சி மற்றும் வெப்ப அலை தாக்கத்தை எதிர்கொள்ள இருக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைந்தாலும், வடகிழக்கு பருவமழை ஓரளவு கைக்கொடுத்து காப்பாற்றும் என நம்பப்படுகிறது.