சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகள் கிடைக்கவில்லை.
இதனால், தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சிமையப்பதற்கு தேவையான பெரும்பான்மயை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு வந்துள்ளார். அவரை இன்று மாலை 3.30 மணிக்கு விஜய் சந்திக்க உள்ளதாகவும், அவரிடம் தமிழகத்தில் ஆட்சியமைக்க விஜய் உரிமை கோர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில் தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்த காங்கிரஸ் நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர்.
இந்த நிலையில், த.வெ.க. அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த இலாகா வழங்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. த.வெ.க. அமைச்சரவையில் இடம்பெறப்போகும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. யார்? என்பது குறித்து முடிவு செய்வதற்காக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் த.வெ.க. நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.