தமிழக செய்திகள்

நீட் வேண்டாம் என தமிழகம் போராடும் போது, நீட் பயிற்சிக்கு வடமாநில ஆசிரியர்களா? - வேல்முருகன்

தமிழகத்தில் தகுதியான ஆசிரியர்கள் இல்லையா? எனவும் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தின் அறிவாற்றல் வளத்தைப் பயன்படுத்தாமல் வெளியிலிருந்து மனிதவளத்தை இறக்குமதி செய்வது சரியான அணுகுமுறையா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

வடமாநில ஆசிரியர்கள் ஏன்?

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குப்பூர் அரசு மாதிரிப் பள்ளியில், நீட் மற்றும் ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியை வழங்க ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியையும், ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகிறது.

நீட் தேவையில்லை என தமிழகம் உறுதியாகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, அதற்கான பயிற்சியை வழங்க வெளிமாநிலங்களில் இருந்து ஆசிரியர்களைத் தேடி அழைத்து வருவது ஏன்?

தமிழகத்தில் கல்வித் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள், போட்டித் தேர்வு நிபுணர்கள் என பெரும் மனிதவளம் உள்ளது. அப்படியிருக்க, இந்தப் பொறுப்பை ஏற்கும் திறமை கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அரசு முதலில் அடையாளம் காணாதது ஏன்?

தேர்ந்தெடுத்தது யார்?

இது வெளிமாநிலத்தவர்களுக்கு எதிரான நிலைப்பாடு அல்ல. ஆனால், தமிழகத்தின் அரசுப் பள்ளியில் உருவாகும் வாய்ப்பில், தமிழகத்தில் உள்ள தகுதியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டாமா? என்பதே அடிப்படையான கேள்வி.

மேலும், அந்த 5 பேரைத் தேர்ந்தெடுத்தது யார்?

எந்த விதிமுறையின் கீழ் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது?

அவர்களின் கல்வித் தகுதி மற்றும் கற்பித்தல் அனுபவம் என்ன?

அவர்களுக்கான ஊதியத்தை வழங்குவது யார்?

தமிழகத்தில் உள்ள தகுதியானவர்களைப் பரிசீலிக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டதா?

இந்த விவரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் அறியும் வகையில் அரசு வெளிப்படுத்த வேண்டும்.

மாணவர்களின் நலனுக்காக உடனடி பயிற்சி தேவைப்படலாம் என்பதை ஏற்றுக்கொண்டாலும், நீட் தொடர்பான தமிழகத்தின் அரசியல் மற்றும் கல்விக் கொள்கை நிலைப்பாடு என்ன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, தமிழகத்தின் அறிவாற்றல் வளத்தைப் பயன்படுத்தாமல் வெளியிலிருந்து மனிதவளத்தை இறக்குமதி செய்வது சரியான அணுகுமுறையா? என்ற கேள்விக்கும் விடை தேவை.

தமிழர்களுக்கு வாய்ப்பு..

எனவே, குப்பூர் பள்ளி விவகாரத்தில் உண்மையை மறைக்காமல் முழுமையான விளக்கத்தை அரசு வெளியிட வேண்டும். தமிழகத்தில் தகுதி பெற்றுள்ள ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களை மாவட்ட வாரியாக அடையாளம் கண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற கல்விசார் பணிகளுக்கு அவர்களுக்கு உரிய வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

நீட் வேண்டாம் என்ற தமிழகத்தின் உரிமைக் குரலுக்கும், நீட் பயிற்சியை முன்னெடுக்கும் நடைமுறைக்கும் இடையிலான முரண்பாட்டை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.