மதுரை,
மின்சாரத்துறையில் நடந்த ஊழல், நஷ்டம் குறித்து அடுத்த வாரம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, மாநில அளவிலான கபடி போட்டி மதுரை அவனியாபுரம் பகுதியில் நடைபெற்றது. இதனை அமைச்சர் நிர்மல்குமார் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. அந்த முறைகேடுகள் குறித்து முதல்-அமைச்சரின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்களும் உடைக்கப்பட்டுள்ளன. வெளிப்படை தன்மையுடன் ஒரு அமைப்பை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.
நெல்லை, உடுமலைப்பேட்டை பகுதியில் மின்சாரத்துறையில் பெரும்பாலான புரோக்கர்கள் செயல்பட்டார்கள். அதை முழுவதுமாக கண்டறிந்து முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.
வெளிப்படையான ஒரு போர்டல் அடுத்த 10 நாட்களில் உருவாக்கப்பட உள்ளது. இனி யாரும் ஒரு மெகாவெட் மின்சாரத்திற்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.
மின்சாரத்துறை தரப்பில் அடுத்த வாரம் இறுதிக்குள் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். இந்த துறையின் நிலை என்ன?. எந்தெந்த வகையில் நஷ்டம் ஏற்பட்டது?. எந்தெந்த இடங்களில் ஊழல் நடந்தது? என்பதை அதில் வெளியிடுவோம்.
டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கில், சி.பி.ஐ. விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பணத்தை திருடியவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். மத்திய அரசு தி.மு.க.வுடன் இணக்கமாக இருக்கும் காரணத்தால் செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி கவர்னருக்கு அனுப்பினோம். ஆனால் கவர்னர் அலுவலகத்தில் அதற்கான அனுமதி அளிக்காதது சந்தேகத்தை கிளப்புகிறது. மேலும் சி.பி.ஐ.யும், தி.மு.க.வும் மறைமுகமாக இணைந்து செயல் படுகிறார்களா? என்ற சந்தேகமும் உள்ளது. இந்த விவகாரத்தை பொறுத்திருந்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.