தமிழக செய்திகள்

மின்சாரத் துறையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்-அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி

தி.மு.க. ஆட்சி காலத்தில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர், சிவசங்கர். அந்தத் துறையைப் பற்றி செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

மதுரை,

மதுரை தமுக்கம் மைதானத்தில், அரசு பொருள்காட்சி தொடங்கியது. இதனை அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் திறந்து வைத்தனர். கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து, அமைச்சர்கள் அரசுத்துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரங்குகளை பார்வையிட்டு 48 பயனாளிகளுக்கு ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், மின்சாரத் துறையில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த செயல்பாடுகள், டிரான்ஸ்பார்மர் கொள்முதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். மின்சாரத்துறையில் முறைகேடுகள் நடக்காத வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. தேவையில்லாமல் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை பற்றி பேசி, ஆஜராகி வருகிறார். தி.மு.க. ஆட்சி காலத்தில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர், சிவசங்கர். அந்தத் துறையைப் பற்றி செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். முன்னாள் அமைச்சர் சிவசங்கரை, "ரப்பர் ஸ்டாம்" போன்று பயன்படுத்தி உள்ளனர்.

கடந்த 2 வருடமாக அவர் எதற்கு கையெழுத்து போட்டார் என்று அவருக்கு தெரியாது. மின்சாரத்துறை மறைமுகமாக நடத்தி கொண்டிருந்தது செந்தில்பாலாஜி, அவருடைய சகோதரர்தான். இந்த துறையை மிக மோசமாக வைத்திருந்தனர். இதற்கு முக்கிய காரணம், செந்தில்பாலாஜி. முதல்- அமைச்சரின் உத்தரவின்படி அந்த துறையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அ.தி.மு.க.வில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும், எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து விலகி த.வெ.க.வில் இணைகிறார்கள். எடப்பாடி பழனிசாமியும், மு.க.ஸ்டாலினும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்த காரணத்தால், அங்கிருந்தவர்கள் இங்கு வந்து சேர்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.