தமிழக செய்திகள்

மேகமலை வன ஆக்கிரமிப்பாளர் பட்டியலில் இடம்பெற்ற அரசு ஊழியர்கள் 118 பேர் யார்?

மேகமலை விவகாரத்தில் 98 கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி,

மேகமலை விவகாரம்

தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு உள்ளிட்ட 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 98 கிராமங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளாக உள்ளன. இந்த புலிகள் காப்பக பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. பல தலைமுறைகளாக வாழும் தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்றக் கூடாது என 98 கிராம மக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே இந்த ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலில் அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் மற்றும் ஓய்வூதியர்கள் 118 பேரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த அரசு ஊழியர்கள் மீது துறை வாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து துறை வாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்த விவரங்களை சமர்ப்பிக்க துறை வாரியான அதிகாரிகளுக்கு தேனி கலெக்டர் ஆர்.வைத்திநாதன் உத்தரவிட்டார்.

118 பேர் யார்?

ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளுக்கு துணை ராணுவத்தை அனுப்ப நேரிடும் என்று சுப்ரீம் கோர்ட்டு எச்சரித்து இருந்தது. அதே நேரத்தில், வனத்துறை தயாரித்த இந்த ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலில் ராணுவ வீரர்கள், துணை ராணுவ வீரர்கள், போலீசார் உள்பட பலரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 47 பேர் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தில் (சி.ஆர்.பி.எப்.) பணியாற்றுபவர்கள்.

மேலும், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த 19 பேர், மின்வாரியத்தில் பணியாற்றுவோர் 11 பேர், அங்கன்வாடி, சத்துணவு திட்ட ஊழியர்கள் 13 பேர், கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர், பணியாளர்கள் 7 பேர், வனத்துறையில் பணியாற்றும் 5 பேர், வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் 5 பேர், தபால் துறை, மருத்துவத்துறை, டாஸ்மாக் உள்ளிட்ட இதர துறைகளில் பணியாற்றும் 8 பேர், முன்னாள் ராணுவ வீரர்கள் 3 பேர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

நோட்டீஸ்

முன்னாள் ராணுவ வீரர்களில் ஒருவர் சார்பதிவாளராக உள்ளதாகவும், போலீசாரில் ஒருவர் உளவுப்பிரிவில் பணியாற்றுவதாகவும் அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள நபர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.