தமிழக செய்திகள்

5 தொகுதிகளில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர்கள் யார்.. யார்? - ஜி.கே.வாசன் அறிவிப்பு

5 வேட்பாளர்கள் பட்டியலையும், கட்சியின் தேர்தல் அறிக்கையையும் ஜி.கே.வாசன் வெளியிட்டார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. த.வெ.க. உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு விவகாரம், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள த.மா.கா.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, ஒட்டன்சத்திரம், கும்பகோணம், கிள்ளியூர் ஆகியவை அந்த 5 தொகுதிகள் ஆகும். இந்த தொகுதிகளில் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று மதியம் 12.12 மணிக்கு த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 வேட்பாளர்கள் பட்டியலையும், கட்சியின் தேர்தல் அறிக்கையையும் ஜி.கே.வாசன் வெளியிட்டார்.

அதன்படி, ஈரோடு மேற்கு தொகுதியில் எம்.யுவராஜா, ராணிப்பேட்டை தொகுதியில் கார்த்திகேயன், ஒட்டன்சத்திரத்தில் விடியல் சேகர், கும்பகோணத்தில் எம்.கே.ஆர்.அசோக்குமார், கிள்ளியூர் தொகுதியில் நிவின் சைமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.