தமிழக செய்திகள்

ஜெயிக்கப்போவது யாரு...? - திமுக, அதிமுக, தவெகவின் தேர்தல் கணக்கு இதுதான்..!

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ந் தேதி நடந்தது.

சென்னை,

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் கடந்த மாதம் (மார்ச்) 15-ந் தேதி சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 9-ந் தேதி கேரளா, அசாம், புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 23-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அதே நாளில், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 152 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. 2-வது கட்டமாக, 142 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (29-ந் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தல்களுக்கும் மொத்தமாக மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

கணிக்க முடியாத நிலை

இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயிக்கப்போவது யாரு? என்பதை இந்த முறை கணித்து கூற முடியாத நிலை உள்ளது. தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நா.த.க. இடையே 4 முனைப்போட்டி நிலவினாலும், ஆட்சி அரியணையில் ஏறப்போவது யார்? என்பதை முன்கூட்டியே சொல்ல முடியவில்லை. ஆனாலும், ஆளுங்கட்சியான தி.மு.க., ஆண்ட கட்சியான அ.தி.மு.க., புதிய வரவான த.வெ.க. ஆகிய கட்சிகள், நாங்கள் தான் ஆட்சி அமைக்கப்போகிறோம் என்று நம்பிக்கையுடன் கூறிவருகின்றன.

சென்னையில் பெருவெள்ளம்

ஆளுங்கட்சியான தி.மு.க., 2011, 2016 ஆகிய சட்டசபை தேர்தலில் எப்படி அ.தி.மு.க. தொடர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததோ, அதேபோல், 2021, 2026 தேர்தலில் நாங்கள் (தி.மு.க.) தொடர் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று நம்பிக்கையுடன் இருந்து வருகிறது. சென்னையில் 2015-ம் ஆண்டு பெருமழை, பெருவெள்ளம் ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியை உரிய நேரத்தில் திறந்துவிடாததே இதற்கு காரணம் என்று, ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க. மீது குற்றம்சாட்டப்பட்டது.

திமுக நம்பிக்கை

ஆனாலும், அடுத்த ஓராண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இது எதிரொலிக்கவில்லை. அ.தி.மு.க.வே மீண்டும் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணி என்ற 3-வது அணி வாக்குகளை பிரித்தது, ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் வெற்றியை எளிதாக்கியது என்று கூறப்படுகிறது.

அதுபோன்ற நிலையே இந்தத் தேர்தலிலும் நடக்கும் என்று ஆளுங்கட்சியான தி.மு.க. நம்பிக்கொண்டு இருக்கிறது. அதாவது, 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வாக்குகளை பிரித்ததுபோல், இந்த முறை விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் வாக்குகளை பிரிக்கும். அது நமக்கு (தி.மு.க.) வெற்றி வாய்ப்பை தரும் என்று உறுதியாக நம்பிக்கொண்டு இருக்கிறது.

அதிமுகவின் நம்பிக்கை இதுதான்

ஆண்ட கட்சியான அ.தி.மு.க.வோ, 2011 சட்டசபை தேர்தலின்போது, ஆளுங்கட்சியான தி.மு.க. மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு, தங்களுக்கு (அ.தி.மு.க.) வாக்குகளை அள்ளிக்கொடுத்து வெற்றியை தேடித்தந்தது. அதுபோன்ற நிலையே இந்தத் தேர்தலிலும் தொடரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது.

காரணம், தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறிவருகிறது. அதற்கு ஆதாரமாக, 2011-ம் ஆண்டு தேர்தலில் 78.22 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைத்ததுபோல், இந்த முறை 85.15 சதவீத வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்துள்ளதையும் காரணமாக கூறிவருகிறது.

விஜய் கட்சி என்ன சொல்கிறது?

சட்டசபை தேர்தலுக்கு புது வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமோ, 1967, 1977-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின்போது, ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தி அலைபோல், இந்த முறையும் அலை ஏற்பட்டுள்ளதாகவும், அது புதிய கட்சிக்கே வெற்றி வாய்ப்பை கொடுக்கும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறது.

அதாவது, 1967-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முடிந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததுபோல், 1977-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்து அ.தி.மு.க. ஆட்சி அரியணையில் ஏறியதுபோல், இந்த முறை த.வெ.க. ஆட்சியை பிடிக்கும் என்று அக்கட்சி நம்பிக்கொண்டு இருக்கிறது.

ஜெயிக்கப்போவது யாரு?

தற்போது, தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய 3 கட்சிகளுமே சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், எந்த தேதியில் பதவியேற்பு விழாவை நடத்துவது?, யார் யாருக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பது? என்றெல்லாம் பட்டியல் தயாரிக்க ஆரம்பித்து விட்டனவாம். எது எப்படியோ, மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகும் போது, ஜெயிக்கப்போவது யாரு? என்பது உறுதியாகிவிடும்.