சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா 27 இடங்களில் போட்டியிட்டது. பா.ஜனதாவின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் தமிழகத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்ட னர். ஆனால், தேர்தல் முடிவுகள் வந்தபோது, ஒரு இடத்தில் மட்டும் பா.ஜனதா வெற்றி பெற்றது. மற்ற இடங்களில் மோசமான தோல்வியை தழுவியது.
தாமரை சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியினரும் தோல்வியை தழுவினர். பா.ஜனதாவின் நட்சத்திர வேட்பாளர்க ளான மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் போன்றவர்களால் கூட வெற்றிக்கனியை பறிக்க முடியவில்லை. இது பா.ஜனதாவின் தேசிய தலைமையை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்த நிலையில் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பா.ஜனதா தேசிய தலைமை தொடங்கியுள்ளது. தமிழக பா.ஜனதாவின் படுதோல்விக்கு என்ன காரணம்? என் பது குறித்து ஆராய்ந்து, அறிக்கை அனுப்ப மத்திய பா.ஜனதா கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக விரைவில் தமிழக பா.ஜனதாவில் குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு தோல்வி குறித்து ஆராயும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 12 இடங்களில் 2-ம் பிடித்தது. கணிசமான வாக்குகளை பெற்று, வாக்கு சதவீதத்தையும் அதிகரித்தது. ஆனால், தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா பெருவாரியான வாக்குகளை இழந்துள்ளது குறித்து குழு ஆராய இருக்கிறது.
இதற்கிடையே, தமிழக பா.ஜனதா மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்படலாம் என்ற தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பா.ஜனதா நிர்வாகிகள் கூறும்போது, "எல்லா கட்சியிலும் நடக்கிற ஒன்று தான். தோல்வி என்று வரும்போது அது பற்றி ஆராயப்படும். பா.ஜனதாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு ஆய்வு அவசியம் தான்” என்றனர்.