சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வப்பெருந்தகை கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டுள்ளது.
இதற்கிடையே, கடும் இழுபறிக்கு பின்னர் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் மீது ஜோதிமணி எம்.பி. கடும் விமர்சனங்களை முன்வைத்தார். நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றிவரும் தகுதி வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் புகார் தெரிவித்தார். இது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது நிருபர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை. 'தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் பதவியில் இருந்து விலக உள்ளேன். எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. முழுக்க முழுக்க ஸ்ரீபெரும்புதூர் மக்களுக்காக பணி செய்ய உள்ளேன். இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை' எனக் கூறினார்.
செல்வப்பெருந்தகையின் இந்த முடிவை காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்பட்டது. இதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக யாரை? நியமிக்கலாம் என டெல்லி காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் மே 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியான பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
புதியவர்களும், ஏற்கனவே தலைவராக இருந்தவர்களின் சிலரின் பெயர்கள் தலைவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. ஆனால், புதிய நபர் ஒருவருக்கே தலைவர் பொறுப்பை வழங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகவும், மே 15-ந்தேதிக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியினர் தகவல் தெரிவித்துள்ளனர். தலைவர் பதவிக்கு பலரது பெயர் அடிபடுகிறது. இந்த பதவிக்கு போட்டாபோட்டி நிலவுகிறது.