சென்னை,
2 தொகுதி இடைத்தேர்தலில் இரு கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து களம் காண்பதால், 5 முனைப்போட்டி உருவாகியுள்ள நிலையில், யாருக்கு லாபம்?, யாருக்கு நஷ்டம்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 17-வது சட்டசபை பொதுத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது. தேர்தல் களத்தில் புதிதாக இறங்கிய த.வெ.க. வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 தொகுதி இடைத்தேர்தலிலும், பொதுத் தேர்தல் போலவே 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவால், தற்போது 5 முனைப்போட்டி நிலவுகிறது. பொதுத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த இரு கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றன. த.வெ.க.வுக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை தேவைப்பட்டபோது, அக்கட்சிக்கு இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆதரவு அளித்தன. ஆனால், இடைத்தேர்தலில் ஆதரவு கிடையாது என்று அறிவித்ததுடன், இரு கட்சிகளும் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டன.
அதன்படி, மதுராந்தகம் (தனி) தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், தாராபுரம் (தனி) தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் வேட்பாளர்களை களம் இறக்குகின்றன. இவ்வாறு இடைத்தேர்தலில் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் இணைந்து களம் காண்பது யாருக்கு லாபம்?, யாருக்கு நஷ்டம்? என்பதைப் பற்றி தொடர்ந்து காண்போம்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 17-வது சட்டசபை பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு 34.92 சதவீத வாக்குகள் கிடைத்தன. எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு 24.19 சதவீத வாக்குகளும், அ.தி.மு.க.வுக்கு 21.21 சதவீத வாக்குகளும் கிடைத்தன. தேசிய கட்சிகளான காங்கிரசுக்கு 3.37 சதவீதமும், பா.ஜ.க.வுக்கு 2.97 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன. தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சிக்கு 4 சதவீத வாக்குகள் கிடைத்தன.
பொதுத் தேர்தலில் தனித்து களம்கண்ட த.வெ.க.வுடன் (34.92 சதவீதம்) இந்த முறை (இடைத்தேர்தல்) காங்கிரஸ் (3.37), ம.தி.மு.க. (?), விடுதலை சிறுத்தைகள் (1.09), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (0.29) ஆகிய கட்சிகள் கைகோர்த்துள்ளன.
அதனால், த.வெ.க. தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநல வெற்றிக் கூட்டணிக்கு, இடைத்தேர்தலில் 39.67 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத் தேர்தலில் ம.தி.மு.க., தி.மு.க.வின் சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டதால், அக்கட்சிக்கு என தனியாக வாக்கு சதவீதம் பதிவாகவில்லை.
இதேபோல், எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டணியில், தி.மு.க. (24.19), தே.மு.தி.க. (1.20) என்ற இரு கட்சிகளே பிரதானமாக இருப்பதால், அந்தக் கூட்டணிக்கு 25.39 சதவீத வாக்குகள் கிடைக்கும் நிலை உள்ளது. மற்றொரு எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. (21.21), பா.ஜ.க. (2.97), பா.ம.க. (2.17), அ.ம.மு.க. (0.87) ஆகிய கட்சிகள் இருப்பதால், அந்தக் கூட்டணிக்கு 27.22 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் இணைந்து தலா ஒரு தொகுதியில் நிற்பதால், அந்தக் கூட்டணிக்கு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 0.60, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 0.66) 1.26 சதவீத வாக்குகளே கிடைக்கும் நிலை உள்ளது. இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் இணைந்து தனியாக களம் காண்பது, தி.மு.க.வுக்கே பாதகமாக அமைந்திருப்பதாக தெரிகிறது. அந்த வகையில், அ.தி.மு.க.வுக்கு லாபம் தான். ஆனால், த.வெ.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே கூறப்படுகிறது.
இந்த வாக்கு சதவீதங்களை எல்லாம் வைத்து பார்க்கும்போது, இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில், அ.தி.மு.க. 2-வது இடத்தை பிடிப்பதுடன் தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி 4-வது இடத்தையும், இரு கம்யூனிஸ்டு கூட்டணி 5-வது இடத்தையும் பிடிக்கும் நிலை உள்ளது.
இது, ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டதுதான். த.வெ.க. அரசின் 4 மாத ஆட்சி மக்களிடம் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை பொறுத்து, வாக்கு சதவீதத்தில் சற்று மாற்றங்கள் ஏற்படலாம்.