திருப்பூர்,
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் விசில் புரட்சியை செய்துள்ளது. முதன் முதலில் போட்டியிட்ட இந்த கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தின் புதிய முதல்-அமைச்சராக விஜய் விரைவில் பதவியேற்க உள்ளார். அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையில் யார்?, யாரை அமைச்சராக நியமிப்பது? என்பது தொடர்பான ஆலோசனையும் நடந்து முடிந்துள்ளது.
த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பெரும்பான்மையாக புதியவர்களாகவே உள்ளனர். ஆனால் எதிர் வரிசையில் உள்ள தி.மு.க., அ.தி.மு.க.வில் வெற்றிபெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியலை நன்கு கரைத்து குடித்தவர்களாக உள்ளனர். தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் நிலவரம், சட்டமன்ற வரலாறுகள், பிரச்சினைகள் தெரிந்தவர்களாகவே உள்ளனர்.
அத்தகையவர்கள் கேள்வி எழுப்பும்போது சட்டமன்றத்தில் பதில் அளிக்க திறமையானவர்களாக இருக்கவேண்டும். ஓரளவுக்கு அரசியல் அனுபவம் நிறைந்தவர்களால் மட்டுமே எதிர்க்கட்சியினர் மற்றும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். எனவே அமைச்சர்களை நியமிப்பதில் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த தி.மு.க. ஆட்சியில் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர். எனவே இந்த புதிய அரசிலும் திருப்பூருக்கு என அமைச்சர்கள் பதவி கிடைக்கும் என்று மக்கள் உறுதியாக நம்புகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 4 தொகுதிகளை த.வெ.க. கைப்பற்றியுள்ளது.
அதாவது திருப்பூர் வடக்கில் முன்னாள் எம்.பி. சத்தியபாமாவும், திருப்பூர் தெற்கில் பாலமுருகனும், பல்லடத்தில் ராம்குமாரும், அவினாசியில் (தனி) கமலியும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு கண்டிப்பாக அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் பெண்களாகிய சத்தியபாமா, கமலி ஆகியோர் பெயர் அமைச் சர்கள் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.