சென்னை,
மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முந்தப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இடைத்தேர்தல் த.வெ.க.வுக்கு கைகொடுக்குமா?, கைவிடுமா? என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 59 ஆண்டு காலமாக ஆட்சிக் கட்டிலில் இருந்த தி.மு.க., அ.தி.மு.க. என்ற இருபெரும் திராவிட கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்சி தொடங்கி 2½ ஆண்டுகளே ஆன த.வெ.க., கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
த.வெ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க இன்னும் 11 இடங்கள் (தற்போது இருப்பது 107, தேவை 118) தேவை என்ற நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 9-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.
இரு தொகுதி இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (த.வெ.க.), பரந்தாமன் (தி.மு.க.), கணிதா சம்பத் (அ.தி.மு.க.), சுகந்தி (மா.கம்யூ.), ஜானகிராமன் (நாம் தமிழர்) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இதேபோல், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா (த.வெ.க.), சுகன்யா (தி.மு.க.), பானுமதி (அ.தி.மு.க.), லட்சுமணன் (இ.கம்யூ), கார்த்திகா (நாம் தமிழர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதியில் 27 வேட்பாளர்களும், தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். பொதுவாக, இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியை எடைபோடும் தேர்தல் என்று சொல்வார்கள்.
அந்த வகையில், கடந்த 4 மாத கால த.வெ.க. அரசின் செயல்பாடு எப்படி? என்பதை ஆராய்ந்து, மதுராந்தகம், தாராபுரம் தொகுதி மக்கள் வாக்களிக்க இருக்கின்றனர்.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 788 வாக்காளர்கள் உள்ளனர். இதில், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 797 பேரும், ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 4 ஆயிரத்து 926 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 65 பேரும் அடங்குவார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கும் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலுக்கும் மத்தியில் புதிதாக 1,152 வாக்காளர்கள் (ஆண்கள் 430, பெண்கள் 722) இணைந்துள்ளனர். மொத்தத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.
தாராபுரம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 406 வாக்காளர்கள் உள்ளனர். இதில், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 523 பேரும், ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 523 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 8 பேரும் அடங்குவார்கள்.
கடந்த 4 மாதங்களில் மட்டும் 663 பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர். இந்தத் தொகுதியிலும் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். மொத்தத்தில் இரு தொகுதிகளிலும் பெண்களே வெற்றியை தீர்மானிக்க உள்ளனர்.
ஏற்கனவே, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தபால் ஓட்டுப்பதிவு முடிந்துள்ளது. மதுராந்தகம் தொகுதியில் 80 வயதுக்கு மேலான வாக்காளர்கள் 451 பேரும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 480 பேரும் என மொத்தம் 931 பேர் வாக்களித்துள்ளனர். இதேபோல், தாராபுரம் தொகுதியில் 1,201 பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர்.
இந்த இரு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி என்பது ஆளுங்கட்சி த.வெ.க.வுக்கு முக்கிய தேவையாக உள்ளது. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை, எப்படியாவது ஜெயித்துவிட்டால், எதிர்வரும் இடைத்தேர்தல்களிலும் நமக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் என்று நினைக்கிறது. மேலும், த.வெ.க. அரசை கவிழ்க்க முடியும் என்றும் நம்புகிறது.
ஆனால், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில், வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள் இருக்கும் நிலையில், அவர்களிடம் யாருக்கு ஓட்டு போடுவீர்கள்? என்று கருத்து கேட்கப்பட்டபோது, பெரும்பாலானோர் த.வெ.க.வுக்குத்தான் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
"தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று கூறப்படுகிறதே?" என்று அவர்களிடம் கேட்கப்பட்டபோது, "கடந்த ஆட்சியிலும் இப்படித்தான் இருந்தது. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்கு த.வெ.க. ஆட்சி சற்று பரவாயில்லை" என்றே தெரிவித்தனர். இதைவைத்து பார்க்கும்போது, பெண்களின் ஓட்டு த.வெ.க.வுக்கு அதிகம் கிடைக்கும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில், ஆண்களின் ஓட்டு தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. என சிதறும் நிலையே உள்ளது. குறிப்பாக, த.வெ.க. அரசு மீது வெறுப்புடன் இருப்பது தெரிகிறது. "தேர்தல் வாக்குறுதியில் சொன்னது ஒன்று, செய்வது ஒன்று" என்று அவர்கள் சலிப்புடன் கூறுகின்றனர்.
இரு தொகுதி வாக்காளர்களின் மனநிலை இவ்வாறு இருந்தாலும், தலைவர்களின் பிரசாரத்தை பொறுத்து இவை மாறக்கூடும். அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.
த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய்யும் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டார். அடுத்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.
தலைவர்களின் பிரசாரம் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அவை கட்சிகளின் வாக்கு சதவீதத்திலும் ஏற்ற, இறக்கத்தை காட்டும் என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில், இடைத்தேர்தலில் பொதுத்தேர்தலைவிட போட்டி பலமாக இருக்கும் என்றே தெரிகிறது. இருந்தாலும் ஆளுங்கட்சியான த.வெ.க.வின் கையே தற்போது வரை ஓங்கியிருப்பதாக தெரிகிறது.