மதுராந்தகம்,
உள்கட்சி பூசல் காரணமாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத் தியபாமா (தாராபுரம்) உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க.வில் சேர்ந்தனர். இதேபோல் பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் 7 தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது. கோர்ட்டு வழக்கு காரணமாக மற்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகி ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 27 பேர் களம் இறங்கினர். இதேபோல் தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா (த.வெ.க.)., சுகன்யா (தி.மு.க.), பானுமதி (அ.தி.மு.க.), கார்த்திகா (நாம் தமிழர்), லட்சுமணன் (இ.கம்யூனிஸ்டு) மற்றும் சுயேச்சைகள் உள்பட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருப்பினும் இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவியது.
2 தொகுதிகளிலும் கடந்த 6-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மதுராந்தகம் தொகுதியில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 423 வாக்குகள் பதிவாகின. அதாவது 86.26 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. தாராபுரத்தில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 214 வாக்குகள் பதிவாகின. அதாவது 80.25 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. மதுராந்தகம் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. இந்த வாக்கு எண்ணிக்கை 21 சுற்றுகள் நடைபெறும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அறிய பயன்படுத்தப்படும் 'விவிபாட்டில் சேகரிக்கப்பட்ட சீட்டுகள் தனியாக எண்ணப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இன்று காலை மாவட்ட தேர்தல் அலுவலரான செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன், தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன் னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டு வாக்கு எண் ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன்பின்னர் எந்திரங்களில் பதிவானவை எண்ணப்படும்.
ஒவ்வொரு சுற்று முடிந்ததும், வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை குறித்து ஒலி பெருக்கியில் அறிவிக்கப்படும். மொத்தம் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன்பிறகு கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தபால் வாக்குகளையும் சேர்த்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற வேட்பாளருக்கு, தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
வாக்கு எண்ணும் மையத்துக்கு முன்பு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், கட்சியினர் தேர்தல் முடிவை அறியும் வகையில் திரளுவார்கள் என்பதால் வாக்கு எண்ணும் மையத்துக்கு முன்பு 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.