சென்னை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
இதனிடையே, இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்தில் பாடப்பட்டது. வந்தே மாதரம், தேசிய கீதத்திற்கு அடுத்து 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தாய்மொழியை 3வது இடத்திற்கு தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ளமாட்டோம் என்று தவெக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தவெக வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.
எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.