சென்னை அம்பத்தூரில் சிங்கப்பூரைச் சேர்ந்த கேபிட்டல் லேண்ட் நிறுவனம் 46 மெகாவாட் திறன் கொண்ட பிரம்மாண்ட தரவு மையத்தை அமைத்துள்ளது. இந்த தரவு மையம் சுமார் 4,900 சர்வர் ரேக்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த தரவு மையத்தை தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யோங் ஆகியோர் இணைந்து இன்று காலை திறந்து வைத்தனர். இந்த நிகழ்வின்போது, முதல்வர் விஜய் - சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யாங் இணைந்து அன்னாசிப் பழங்களை தரையில் உருட்டிவிட்டனர்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், விஜய் அன்னாசி பழத்தை உருட்டிவிட்டது ஏன்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூர் நிறுவனத்தின் தொடக்க விழாக்கள் அல்லது புதிய அலுவலகத் திறப்பு விழாக்களின் போது அன்னாசி பழத்தை கொடுத்து அதை உருட்ட சொல்வது ஒரு பாரம்பரியமான கலாச்சார வழக்கமாகும். அன்னாசி பழத்தை ஹோக்கியன் மொழியில் ஓங் லாய் என அழைப்பார்கள். இந்த ஓங் லாய் என்ற பெயர் அதிர்ஷ்டம், செல்வத்தை பெருக்கும் என கருதப்படுகிறது.
இதனால் அன்னாசி பழம், மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியாவில் புதிய வீடு, புதிய அலுவலகம், புதிய நிறுவனத்தை தொடங்கும் போது வாசலில் இருந்து உள்ளே, அன்னாசி பழத்தை உருட்டி விடுவது வழக்கம். இதன் மூலம் புதிய தொடக்கம் எதுவாக இருந்தாலும் அது சிறப்பாகவும், லாபகரமானதாகவும் இருக்கும் என்பது ஐதீகம். இதன் அடிப்படையிலேயே முதல் அமைச்சர் விஜய்யும் இன்று அன்னாசி பழம் உருட்டிவிட்டுள்ளார்.