சென்னை,
தவெக அரசில் அங்கம் வகிப்பதால் திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க முடியாது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெற்ற நிலையில் தேர்தலுக்குப் பின், தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்தது.
ஆட்சி அமைக்க உதவிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தவெக அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது. ஐயுஎம்எல் பாபநாசம் எம்எல்ஏ ஷாஜகான், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அதேபோல சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுவில், வாணியம்பாடி எம்எல்ஏவும் சட்டப்பேரவைக் கட்சித் தலைவருமான எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் பாஷா இடம்பெற்றார்.
இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐயுஎம்எல்) விலகுவதாக கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் அறிவித்தார்.
இது தொடர்பாக காதர் மொகிதீன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
60 ஆண்டுகளுக்கு மேலாக திமுக கூட்டணியில் பயணித்தோம். தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரவில்லை. ஸ்டாலின் முதல்-அமைச்சராக வருவார் என ஐயூஎம் எல் தேர்தலில் கடுமையாக உழைத்தது. இறைவனின் நாட்டம் வேறாக அமைந்தது.
எல்லா பக்கமும் விசில் ஊதப்பட்டு, தவெக வெற்றி பெற்றது. தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடும் என்பதால் அந்த முடிவை எடுத்தோம். எந்த நிபந்தனையும் இன்றி தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம். நாங்கள் கேட்காதபோதும், அமைச்சரவையில் பங்கேற்க தவெக அழைத்தது. இறுதியில் தவெகவிற்கு ஆதரவு என முடிவெடுத்தோம்.
தவெக நல்லாட்சி தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மக்களும் விரும்புகிறார்கள்; தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல் கட்சியை இணைத்ததற்கு விஜய்க்கு வாழ்த்து. தவெக அரசில் அங்கம் வகிப்பதால் திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க முடியாது.
இஸ்லாமிய மார்க்கத்தில் 5 கடமை இருக்கிறது. ஆறாவது கடமை ஜனநாயக நாட்டில் வாக்களிப்பதாகக் கருத வேண்டும் என்றுதான் சொன்னேனே தவிர திமுக கூட்டணிக்கு வாக்களிக்கச் சொல்லவில்லை. திமுகவிற்கு வாக்களிப்பது ஆறாவது கடமை என நான் சொல்லவில்லை.
இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என எந்த தேர்தலாக இருந்தாலும், தவெக ஆட்சி தொடர்ந்து நீடிக்க ஒத்துழைப்போம்” தவெக கூட்டணியில் ஐயுஎம்எல்கட்சி தொடர்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.