சென்னை,
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது அவர் கால்களில் காலணி அணிந்தபடி கோவில் வளாகத்திற்குள் சென்றதாக வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் காலணி அணிந்து சென்றது ஏன்? என்பது குறித்து அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்ரீரங்கம் கோவிலில் நீண்ட காலமாக கோபுர சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் தரையில் ஆணிகள் விழுந்திருக்கலாம் என்பதால், அங்கு ஊழியர்கள் கூறியதன்படி நான் காலணி அணிந்து சென்றேன். பகுத்தறிவு இல்லாதவர்கள்தான் இது போன்ற சர்ச்சையை கிளப்பி விடுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.