கன்னியாகுமரி,
லாட்ஜில் ஒன்றாக தங்கியிருந்த போது ரூ.20 ஆயிரத்தை அபகரிக்க முயன்றதால் பெண்ணை கொலை செய்ததாக கைதான டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள ஆத்திக்காட்டுவிளையை சேர்ந்தவர் செல்வி (வயது 50). இவர் கடந்த 16-ந் தேதி கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வியை கொலை செய்த ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த செல்வராஜை (31) கைது செய்தனர்.
அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் சென்னையில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். சவாரி இல்லாத நாட்களில் வெளியூர் செல்வது வழக்கம். அதன்படி கன்னியாகுமரியை சுற்றி பார்ப்பதற்காக வந்தேன். அப்போது வடசேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த செல்வி அறிமுகமானார். அவரை அழைத்து கொண்டு கன்னியாகுமரி விவேகானந்தபுரம் வந்து ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினோம்.
பின்னர் நான் குளித்து விட்டு வந்த போது என்னிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை செல்வி எடுத்தார். இதைப்பார்த்த நான் பணத்தை கொடுக்கும்படி கேட்டேன். அப்போது அவர், உன்னிடம் நிறைய பணம் இருக்கிறது. ஆனால் எனக்கு குறைவாக ரூபாய் தருகிறாய், என்று என்னிடம் வாக்குவாதம் செய்தார். இதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது நான் ஆத்திரத்தில் செல்வியை கீழே தள்ளி தலையணையால் முகத்தை அழுத்தினேன். இதில் மயக்கமடைந்தார்.
இதையடுத்து நான் அவரது கம்மலை பறித்து விட்டு பஸ் மூலம் கோவைக்கு தப்பி சென்றேன். ஆனால், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி என்னை கோவையில் வைத்து கைது செய்தனர். அப்போதுதான் செல்வி இறந்தது தெரியும். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து செல்வராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.