தமிழக செய்திகள்

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்? - பரபரப்பு தகவல்

அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெறாததற்கு 2 காரணங்கள் முக்கியமானதாக கூறப்படுகின்றன.

சென்னை,

தவெகவுக்கு அதிமுக ஆதரவு;

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க, அ.தி.மு.க.வில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணி எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் ஆதரவு அளித்தனர். இதனால், த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வினருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வினர் இடம் பெற்றால், குதிரை பேரம் நடந்தது உறுதியாகிவிடும் என்றும், கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், இன்று பதவியேற்றுக்கொண்ட 23 அமைச்சர்களில், காங்கிரஸ் கட்சியினர் 2 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், அ.தி.மு.க.வினர் மற்றும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் இடம்பெறவில்லை.

இரண்டாக உடைந்த அதிமுக;

தற்போது, அ.தி.மு.க. 2 ஆக உடைந்து நிற்கிறது. மொத்தமுள்ள 47 எம்.எல்.ஏ.க்களில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 22 பேரும், சி.வி.சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தலைமையில் 25 பேரும் உள்ளனர். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க. அரசுக்கு 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்ததால், அதில் 5 பேருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சட்டச் சிக்கலை கருத்தில் கொண்டு, கடைசி நேரத்தில் அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெறுவது தவிர்க்கப்பட்டது. அதற்கு 2 காரணங்கள் முக்கியமானதாக கூறப்படுகின்றன.

தகுதி நீக்கம் தொடர்பான அச்சம்;

முதல் காரணம் என்னவென்றால், தகுதி நீக்கம் தொடர்பான அச்சம். அதாவது, சி.வி. சண்முகம் -எஸ்.பி. வேமணி உள்ளிட்டவர்கள் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். எடப்பாடி பழனிச்சாமிதான் அவர்களின் 'பி பார்ம்'-ல், அதாவது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தேவையான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளார். மேலும், அ.தி.மு.க.வின் கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அவர் நியமித்துள்ளார். அவர் த.வெ.க. நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் தகவல் அனுப்பினார்.

ஆனால், அதனை சி.வி.சண்முகம் -எஸ்.பி.வேலுமணி அணியின் எம்.எல்.ஏ.க்கள் ஏற்கவில்லை. த.வெ.க.வுக்கு ஆதரவாக சட்டசபையில் வாக்களித்தனர். கொறடா உத்தரவை மீறினால், அந்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியும். அந்த வகையில், 25 பேரையும் தகுதி நீக்கம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தற்போது, சபாநாயகராக த.வெ.க.வின் ஜே.சி.டி.பிரபாகர் இருக்கிறார். இதனால், அவர் தகுதி நீக்கம் செய்ய தவறும் பட்சத்தில், எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றம் செல்லலாம். அப்படி செல்லும்போது, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வர அதிகம் வாய்ப்புள்ளது. இதனால் 25 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட நேரிடும்.

இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில், அதில் உள்ளவர்களுக்கு அமைச்சர் பதவியை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினால், அது அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். நீதிமன்றமும் அவரது செயலை கண்டிக்க வாய்ப்பு இருக்கிறது.

பிற கட்சிகளின் எதிர்ப்பு;

2-வது காரணம் என்னவென்றால், அ.தி.மு.க.வினரை அமைச்சரவையில் சேர்ப்பதை த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்கி உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இரு கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் விரும்பவில்லை. 'அ.தி.மு.க.வினரை அமைச்சரவையில் சேர்த்தால் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

அதேபோல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், அ.தி.முக.வினரை அமைச்சரவையில் சேர்ப்பதற்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து, பிற கட்சிகளின் ஆதரவை இழக்க வேண்டாம் என்று முதல்-அமைச்சர் விஜய் கருதினார். மேற்கண்ட 2 காரணங்களாலேயே, த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வினருக்கு இடம் வழங்கப்படவில்லை என்ற பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.