சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார். இதில், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். த.வெ.க., ஆட்சி அமைக்க, பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்டு, வி.சி.க., உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “திருச்சி கிழக்கு தொகுதி உட்பட எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். இதை முதல்-அமைச்சர் விஜய்யிடமே நான் தெளிவுபடுத்திவிட்டேன். அமைச்சரவையில் நான் இடம் பெற வேண்டும் என த.வெ.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. 100% நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப்போவதில்லை.
அமைச்சரவையில் வி.சி.க. பங்கு பெற்றால்தான் இந்த ஆட்சிக்கு பாதுகாப்பு என த.வெ.க. கருதியதால் அமைச்சரவையில் பங்கு பெற்றோம்” என்று அவர் கூறினார்.