சென்னை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
எனினும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை (118 எம்.எல்.ஏ.க்கள்) தமிழக வெற்றிக்கழகம் நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். இந்த நிலையில், த.வெ.க. ஆட்சியமைக்க சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. எனினும், அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம். அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம் என்றும் தெரிவித்தன.
த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தது பற்றி கம்யூனிஸ்டு கட்சிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதன்படி, ஜனநாயகத்திற்கு மக்கள் ஆதரவு அளித்து உள்ளனர். அதனால், விஜய்க்கு எங்களுடைய ஆதரவை தெரிவித்து உள்ளோம் என சி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியுள்ளார். தமிழக உரிமைகளுக்காக விஜய் இனிமேல் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் மற்றொரு தேர்தல் நடைபெற கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு அமைய வேண்டும். கவர்னர் ஆட்சியை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டது. அதனை முறியடிக்க த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்திருக்கிறோம். 10-ந்தேதிக்குள் அரசு அமையாவிட்டால் சிக்கல் ஏற்படும் என பெ. சண்முகம் கூறினார்.
இதேபோன்று, சி.பி.எம். கட்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் கூறும்போது, மதவாத சக்திகளை நுழைய விடமாட்டேன் என விஜய் உறுதியாக கூறினார். இக்கட்டான சூழலில் ஆதரவு கொடுத்ததற்காக நன்றியும் தெரிவித்து கொண்டார். ஆட்சியில் ஏதேனும் குறைபாடு காணப்பட்டால் கூறுங்கள். சரி செய்து கொள்கிறேன் என அவர் கூறினார் என்றார்.
தி.மு.க. அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. மக்கள் ஜனநாயகத்திற்கு ஆதரவளித்து முன்மொழிந்தனர். நாங்கள் வழிமொழிகிறோம் என அவர்கள் கூறினர். எங்களுடைய முடிவை வி.சி.க.வும் ஆதரிக்கும். எனினும், மக்களுக்காக தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றுவோம் என பாலகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில் மறுதேர்தல் நடைபெறாமல் தவிர்க்கவும், கவர்னர் ஆட்சி நடைபெறாமல் தடுக்கவும் இந்த ஆதரவை வழங்குகிறோம். தமிழகத்தில் கொல்லைப்புறம் வழியே ஆட்சியமைக்க பா.ஜ.க. முனைகிறது. அதனை தடுக்க நாங்கள் எங்களுடைய ஆதரவை வழங்குகிறோம் என்றார். விஜய்க்கு மக்கள் வாய்ப்பளித்து இருக்கிறார்கள். நாங்கள் வெளியில் இருந்து அவருக்கு ஆதரவு அளிப்போம் என்று கம்யூனிஸ்டு கட்சியினர் கூறினர்.