சென்னை,
அ.தி.மு.க.வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், இன்று முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் சூழலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் தலைவர்கள் தவெகவில் இணைந்து வரும் நிலையில், வைகைச்செல்வனின் வருகையும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து விலகிய வைகைச்செல்வன், நேற்று வெளியிட்ட அறிக்கையில் அக்கட்சியின் தலைமையை கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து அவர் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதனையடுத்து, வைகைச்செல்வன் தவெகவில் இணைந்தது குறித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது;-
தமிழக வெற்றிக்கழகத்தில் இன்று இணைந்திருக்கிறோம். முதல்-அமைச்சர் விஜய் எளிமையான, இனிமையான தலைவர். மக்கள் செல்வாக்கு உள்ள ஒரு தலைவர். ஊழல் அற்ற ஒரு ஆட்சி. லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரு நிர்வாகம் என்ற அடிப்படையில் தவெகவின் ஆட்சியை நினைத்துப் பார்க்கையில் மன மகிழ்ச்சி தருகிறது.
ரைட் பார்டி, ராங் லீடர். அதிமுக எளியவர்களின் ஒரு இயக்கமாக இருந்தது. அதே கொள்கை கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து விட்டது. எளியவர்களையும் உயர்ந்த நிலையில் வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்து போய் விட்டது.
பண பலம் மட்டுமே மிக முக்கியம் எனக் கருதப்பட்ட நிலையில் தான் இந்த ஒரு படுதோல்வியை அதிமுக சந்தித்தது. இனி என்ன ஆகும் எனப் போகப் போகத்தான் தெரியும். அந்த இடத்தை தவெக நிரப்பி விட்டது. தகுதி உள்ள தலைவராக முதல்-அமைச்சர் விஜய்யை அனைவரும் பார்க்கின்றனர். அதிமுக, திமுகவின் வெற்றிடத்தை காலம் நிரப்பி விட்டது.
அதிமுக மிகச்சிறந்த இயக்கம், தவறான தலைவர் என்கிற அடிப்படையில் தன்னுடைய அடையாளத்தை இழந்து வருகிறது. இனி காலம்தான் அதற்கு நல்ல வழியை ஏற்படுத்த வேண்டும்.
அந்தக் கட்சியை குறைசொல்ல எனக்கு விருப்பம் இல்லை. தலைமை சரி இல்லை என்ற காரணத்தினால் கட்சிகள் உடைகின்றன. தலைமைப் பண்பை எடப்பாடி பழனிசாமி இழந்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க.வில் நீண்ட காலம் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்ட வைகை செல்வன், சிறந்த பேச்சாளராகவும், இலக்கிய ஆர்வலராகவும் அறியப்படுகிறார். பல்வேறு நூல்களை எழுதியுள்ள அவர், கட்சியின் சார்பில் அரசியல் விவாதங்களிலும் தொடர்ந்து பங்கேற்று வந்துள்ளார்.
தவெகவில் இணைந்துள்ள வைகை செல்வனுக்கு செய்தித் தொடர்பு பிரிவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் எனக் கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.