மதுரை,
மதுரை விமான நிலையத்தில் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரே தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என உதயநிதி ஸ்டாலின் கூறிவருகிறார். தமிழகத்தில் என்ன வளர்ச்சி உள்ளது. அதுகுறித்து தி.மு.க. அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா?. தொகுதி மறுவரை குறித்து முதல்-அமைச்சர் எச்சரிக்கை வீடியோ வெளியிட்டுள்ளார். ஒரு முதல்-அமைச்சர் பேசும் பேச்சா இது?. அவருக்கு தவறாக தெரியவில்லையா? அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சுந்தர் சி-யை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
எங்களை பார்த்து படிக்காதவர்கள் என்று சொன்னார்கள், ஆமாம் நாங்கள் படிக்காதவர்கள்தான். ஆனால் எங்கள் வளர்ப்பு சரியாக உள்ளது. நானும். சுந்தர் சி-யும் தனிமனித தாக்குதல் நடத்தவில்லை. எங்களை பார்த்து சினிமா சங்கி, கட்சி விட்டு கட்சி தாவுபவர் என்று கூறுகிறார்.
அப்படியென்றால் தி.மு.க.வில் யாரும் கட்சி விட்டு கட்சி மாறவில்லையா? விஜய்க்கு பின்னால் கூட்டம் அதிகமாக வருகிறது. அது என்ன என்பது மே 4-ந் தேதிக்கு பிறகு தெரியும். ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஏன் தமிழகத்திற்கு பிரசாரத்திற்கு வரவில்லை என்று கேட்க தைரியம் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளதா? நான் என் சுயமரியாதைக்காக தி.மு.க.விலிருந்து வெளியே வந்தேன்.
ரூ.30 ஆயிரம் கோடி குறித்து அமைச்சர் பி.டி.ஆர். ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் உள்ளது என் குரல் இல்லை என்று ஏன் வழக்கு தொடரவில்லை? அப் போது அது உண்மைதானே?.
இவ்வாறு அவர் கூறினார்.