தமிழக செய்திகள்

த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்கியது ஏன்? - வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேட்டி

தங்கள் முடிவு தி.மு.க. உடனான உறவை பாதிக்காது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.

இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.

த.வெ.க.வின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன. தொடர்ந்து, நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று வி.சி.க. மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் த.வெ.க. ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளது.

தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் தரப்பில் இருந்து கவர்னரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. ஆனால் கவர்னர் இன்று மாலை கேரளா செல்வதாக கூறப்பட்ட நிலையில், விஜய்யை சந்திக்க கவர்னர் நேரம் ஒதுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தது ஏன்? என்பது குறித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“மக்கள் நல கூட்டணி உருவான காலத்தில் இருந்து கொள்கை அடிப்படையில் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளும், வி.சி.க.வும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஒருங்கிணைந்து களமாடியிருக்கிறோம்.

தற்போது தமிழகத்தில் அரசியல் நெருக்கடி உருவாகி இருக்கும் சூழலில் இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகளும் தொலைநோக்குப் பார்வையோடு, எதிர்கால அரசியலையும் கருத்தில் கொண்டு, கலந்து பேசி அறிவிப்பு வெளியிட்டிருந்தோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அவர்களின் மாநிலக் குழுவில் எடுத்த முடிவுகளின் அடிப்படையில், வி.சி.க.வின் உயர்நிலைக் குழுவில் கலந்தாய்வு செய்து முடிவை அறிவிப்பது என்று திட்டமிட்டிருந்தோம்.

அதன்படி 8-ந்தேதி(நேற்று) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் த.வெ.க.வுக்கு ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது என்று முடிவு எடுத்தார்கள். அந்த முடிவை முன்வைத்து வி.சி.க.வின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நேற்று மாலை காணொலி வாயிலாக நடைபெற்றது. அந்த கூட்டத்தின் முடிவில், இறுதியான முடிவை எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவருக்கு வழங்குகிறோம் என்று உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்.

அதன் அடிப்படையில் இன்று மீண்டும் வி.சி.க. பொதுச்செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோரோடு நான் கலந்தாலோசனை செய்து ஒரு முடிவை எடுத்தோம். அதன் அடிப்படையில் த.வெ.க.வுக்கு ஆதரவு கடிதத்தை வழங்கியிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியை பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், விஜய் ஆட்சி அமைக்க வி.சி.க.வின் நிலைப்பாடு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாட்டை வைத்து நங்கள் எங்கள் நிலைப்பாட்டை எடுப்போம் என அறிவித்திருந்தேன். தற்போது த.வெ.க. ஆட்சி அமைக்க மட்டும் ஆதரவு வழங்கியிருக்கிறோம், வெளியில் இருந்து ஆதரவை வழங்குகிறோம்.

நாங்கள் ஒரே விஷயத்தில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறோம். எங்களால் விஜய் ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற நிலை வந்துவிடக்கூடாது, எங்களால் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற அளவில் இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம்.

நாங்கள் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில்தான் இருக்கிறோம். ஆனால் அரசியல் நெக்கடியான சூழலில், எங்கள் கட்சிக்கு இருக்கும் சுதந்திரத்தை பயன்படுத்தி இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இந்த முடிவு தி.மு.க. உடனான எங்கள் உறவை பாதிக்கும் என நம்பவில்லை.

இடதுசாரிகளும், வி.சி.க.வும் எந்த முடிவு எடுத்தாலும், அந்த முடிவை தி.மு.க. தலமைக்கு அறிவிப்போம் என்று கூறியிருந்தோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இந்த முடிவை நாங்கள் தெரிவித்திருக்கிறோம். அது உங்கள் கட்சியின் சுதந்திரம், வாழ்த்துகள் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

கவர்னர் விஜய்யை சந்திக்க மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. த.வெ.க. தலைவர் விஜய்க்கு மக்கள் கூடுதல் இடங்களை கொடுத்து, தனிப்பெரும் கட்சி என்ற அங்கீகாரத்தை தந்திருக்கிறார்கள். கவர்னர் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். குதிரை பேரத்திற்கு இடம் கொடுக்க கூடாது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் த.வெ.க.வுக்கு உள்ளது. கவர்னர் ஜனந்நாயகத்தை படுகொலை செய்யக் கூடாது.

த.வெ.க. தலைவர் விஜய் கவர்னரை சந்தித்த பிறகு இன்று வி.சி.க. கட்சி தலைமையகத்திற்கு வருவதாக சொன்னார். நான் அவரிடம் பதவியேற்புக்கு பிறகு சந்திப்போம் என்று சொல்லி இருக்கிறேன்.”

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.