சென்னை,
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகரில் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்பு கட்டமைப்புகளுக்காக கடந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது. 2026 செப்டம்பர் நிலவரப்படி, 2022 முதல் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளுக்கான மொத்தத் திட்டச் செலவு ரூ.6,066.80 கோடி என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 1,385 கி.மீ. நீளப் பணிகளில் 1,314 கி.மீ. நிறைவு பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்படியானால், இவ்வளவு பெரும் நிதி ஒதுக்கீட்டுக்குப் பிறகும், கனமழை பெய்யும் நேரங்களில் சென்னை நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்குவதற்கான காரணம் என்ன?
குறிப்பாக, 105 இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்புகள் விடுபட்டிருந்ததாகவும், அவற்றில் 37 இடங்களில் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், 68 இடங்களில் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடிகால்களை அமைப்பது மட்டுமே போதுமா? அவை ஒன்றோடொன்று முறையாக இணைக்கப்பட்டு, நீர் வெளியேறும் இறுதி இடம் வரை தடையின்றி செயல்படுவதை அரசு உறுதி செய்துள்ளதா?கொசஸ்தலையாறு வடிநிலத்தில் 769 கி.மீ. நீளத்திற்கு ரூ.3,220 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய மிகப்பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட நிலையிலும், மழைநீர் தேங்கும் பகுதிகள் தொடர்ந்து இருப்பதற்கான காரணங்களை அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும்.
மேலும், மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க ஏற்கனவே வழங்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு முழுமையான நிலவர அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். எந்தப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன, எவை நிலுவையில் உள்ளன, அவற்றை எப்போது முழுமையாக முடிக்கப் போகிறது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
மழைநீர் வடிகால் பணிகளில் முறைகேடுகள், ஒப்பந்த நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையின்மை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உரிய முறையில் விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அரசுப் பணத்திற்கு இழப்பு ஏற்படுத்திய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தமிழக அரசு சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.