தமிழக செய்திகள்

கோவில்களில் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன்? - அமைச்சர் ரமேஷ் விளக்கம்

கர்ப்பிணிகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் கட்டுப்பாடு பொருந்தாது என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கிய கோவில்களில் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு, அதனைப் பாதுகாப்பாக லாக்கரில் வைக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

புதிய நடைமுறை இல்லை

இந்த நிலையில், கோவில்களில் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன்? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

இது புதிய நடைமுறை கிடையாது. மதுரை ஐகோர்ட்டில் திருச்செந்தூர் கோவிலில் செல்போன்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. 2022-ம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு முழுக்க உள்ள கோவில்களில் செல்போன்கள் கொண்டு செல்லத் தடை விதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து அதிக கோவில்களில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியளிக்கப்படவில்லை. அப்போதிலிருந்து செல்போன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. கோவில்களில் செல்போன்கள் தடை என்பது முன்பே இருந்தது. அதற்கான கவுண்டர்கள் 52 முக்கிய கோவில்களில் இல்லாததால் அதனை கொண்டு வந்துள்ளோம்.

கட்டுப்பாடு பொருந்தாதவர்கள் யார்?

மக்கள் வெகுநேரம் வரிசையில் நிற்கவைக்கும் சூழல் உருவாகிவிடக் கூடாது. மக்களுக்கு இது பாரமாக மாறிவிடக் கூடாது என்பதைப் பார்த்துவிட்டு, அதற்குத் தகுந்தாற்போல் முடிவுகளை எடுங்கள் என்று கோவில்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். கர்ப்பிணிகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் கட்டுப்பாடு பொருந்தாது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோவில்கள் இருக்கக் கூடாது என நினைப்பவர்களே தவறாக தகவல்களைப் பரப்புகின்றனர். கோவில்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு ரூ.5 வாங்கலாமா, வேண்டாமா என கோவில்களே முடிவெடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளோம். கோவில் அரசியல் செய்வதற்கான இடம் கிடையாது.

பக்தர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுப்பதற்காகத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களுக்குள் செல்லும்போது தமிழ் கல்வெட்டுகள், எழுத்துகள் நிறைய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதனை பக்தர்கள் பார்க்க வேண்டும். செல்போன் கொண்டு செல்வதால் இது தடைபடும் என்பதால் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தினோம்.

கூட்டம் அதிகம் கூடும்போது..

பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள கோவில்களிலும் செல்போன்கள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. இதனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். இதனால் பக்தர்களுக்கு சிரமங்கள் இருந்தால் நிச்சயமாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், கோவில்களில் கூட்டம் அதிகம் கூடும் நாட்களில் செல்போன்களை வாங்க வேண்டாம் எனவும் கோவில்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT