தமிழக செய்திகள்

ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி எதற்கு? - பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

உங்கள் ராஜ குருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக் கொள்ளுங்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது சட்டசபையில் தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

குதிரை பேரம் நடந்ததாக ஏராளமானோர் கூறியிருக்கும் நிலையில் அது குறித்து பேச வேண்டும். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான நிகழ்வு தற்போது நடந்துள்ளது. இந்தச் செயல் மிகுந்த வேதனையைத் தருகிறது.

அரச குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை என முதல்-அமைச்சர் விஜய் சொல்லும்போது அனைவரும் வரவேற்றோம். ஆனால் அவருடைய ராஜகுருவாக இருக்கும் ரத்தன் பண்டிட்டை அரசு பதவியில் அமர்த்தியதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் ராஜ குருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக் கொள்ளுங்கள். அரசுப் பதவி எதற்கு?. இதன்மூலம் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கும் இளைஞர்களுக்கும் என்ன மெசேஜ் சொல்கிறீர்கள்? இதற்கு முதல்-அமைச்சர் நிச்சயம் விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும். இந்த ஆட்சி ஒரு நேர்மையான ஆட்சியாகவும், அறிவியல் பூர்வமான ஆட்சியாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.