தமிழக செய்திகள்

ராகுல் காந்தியை சகோதரர் என குறிப்பிடாதது ஏன்? - முதல்-அமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

கடந்த ஆண்டு சகோதரர் என்று தெரிவித்திருந்த மு.க.ஸ்டாலின், இந்த முறை அதனை தெரிவிக்கவில்லை.

சென்னை,

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்தவகையில், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியம், வலிமை மற்றும் நீண்ட ஆயுள் பெற்று தமிழக மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வாழ்த்துகிறேன்” என தெரிவித்திருந்தார்.

இதற்கு, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி” என தெரிவித்திருந்தார். ஆனால், இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபோது அதற்கு, “அன்புள்ள சகோதரரே, தொலைபேசியில் உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ராகுல் காந்தியை ‘சகோதரர்’ என்று குறிப்பிட்டிருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த முறை ‘சகோதரர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சனம் ஒன்றை வைத்துள்ளார். அதில் அவர், “போன வருஷம்: புரோ, புரோ!... இந்த வருஷம்: புரோ இல்லை... ஏன் புரோ?” என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.