தமிழக செய்திகள்

மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பெயரை அறிவிப்பதில் தாமதம் ஏன்..? இன்று வெளியாகுமா..?

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

அதில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பொன்னேரி (தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி), சோளிங்கர், ஊட்டி, ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை (தனி), துறையூர் (தனி), கவுண்டம்பாளையம், ஆத்தூர் (தனி), பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன் கோவில், மேலூர் ஆகிய 28 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

நேற்று முன்தினம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். இதில், மேலூர் சட்டமன்ற தொகுதியை தவிர எஞ்சியுள்ள 27 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மட்டுமே அடங்கி இருந்தது. இது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் பெயர் ஏன் அறிவிக்கப்படவில்லை என்பது குறித்து பல்வேறு யூகங்களும் எழுந்தன. அதன்படி, மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலில் முதல் நபராக அந்த பகுதியை சேர்ந்த சி.ஆர்.சுந்தர்ராஜன் என்ற தொழில் அதிபர் பெயர் இருந்ததாக கூறப்படுகிறது. அதே போன்று, விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது உறவுப்பெண்ணான சந்தியா என்பவருக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில், காஞ்சீபுரம் தொகுதி முன்னாள் எம்.பி.விஸ்வநாதனும் பொது தொகுதியான மேலூரில் நின்று போட்டியிடலாம் என்று விரும்பியதாகவும் கூறப்படுகிறது. அதே போன்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைத்துறை மாநிலத் தலைவராக இருக்கும் வக்கீல் எஸ்.ஜெயசிம்மாவும் மேலூர் தொகுதியில் போட்டியிட கடும் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு மேலூர் தொகுதியை குறிவைத்த நபர்கள் அனைவரும் ஒவ்வொரு வகையில் முக்கியமானவர்களாக இருந்த காரணத்தால் யாருக்கு வாய்ப்பு அளிப்பது என்பதில் ஏற்பட்ட தயக்கம் காரணமாக மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பெயர் வெளியிடப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், சோனியாகாந்தியின் ஆலோசனை பெற்று மேலூர் தொகுதி வேட்பாளரை அறிவிக்கலாம் என்று நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் நேற்றிரவே மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பெயர் வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. நாளை வேட்புமனு தாக்கல் கடைசி நாள் என்பதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலூர் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.