சென்னை,
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30-ம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
திமுக கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இதில் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவாகி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 3 கட்சிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 28 தொகுதிகள் எவை என்பது குறித்து திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. அதன்படி, திமுக ஒதுக்கிய 23 தொகுதிகளை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், எஞ்சிய 5 தொகுதிகள் தொடர்பாக திமுக ஒதுக்கிய தொகுதிகளுக்கு மாற்றாக வேறு தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு வருகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஸ்ரீவைகுண்டம், கிள்ளியூர் ஆகிய 2 தொகுதிகளில் இந்த முறை தி.மு.க. போட்டியிட முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த 2 தொகுதிகளை விட்டு தர முடியாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. இதுதான் காங்கிரசுடான தொகுதி பட்டியலை இறுதி செய்வதில் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் விஜயகாந்துக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று தந்த 'ரிஷிவந்தியம்' தொகுதியை விருப்பபட்டியலில் பிரேமலதா பிரதானமாக அளித்துள்ளார். தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். எனவே அவருக்காக விருகம்பாக்கம் தொகுதியையும், தான் பிறந்த ஊரான ஆம்பூர் தொகுதியையும் பெற்றுவிட வேண்டும் என்பதில் பிரேமலதா பிடிவாதமாக இருக்கி றார். ஆனால் இந்த 3 தொகுதிகளும் தி.மு.க.வுக்கு பலம் வாய்ந்தவை என்பதால், விட்டு கொடுக்க தி.மு.க. தயக்கம் காட்டி வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்தவரையில் தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கிவிட்டு தங்களுக்கு ஒரு தொகுதியை குறைத்து வழங்கியதால் அக்கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். எனவே தொகுதி பட்டியலில் தி.மு.க.வுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் அக்கட்சி குழு முனைப்பு காட்டுவதாக தெரிகிறது.
இந்த 3 காரணங்கள்தான் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை இறுதி செய்வதில் தாமதமாக அமைந்துள்ளது. அனைத்து கட்சிகளுடன் சுமுக உடன்பாடு ஏற்பட்டு தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் அண்ணா அறிவாலயத்தில் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த 3 கட்சிகளுடன் உடன்பாடு ஒப்பந்தம் முடிவடையாததால் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் முடிவை தி.மு.க. நேற்று கைவிட்டது.
இந்நிலையில் இன்று (28-03-2026) சுமுக உடன்பாடு எட்டப்பட்டு, தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.