சென்னை,
சட்டைப்பையில் புகைப்படம் வைத்திருப்பது தொடர்பான விவகாரத்தில் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இடையே நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, அது ஏமாற்றம் அளிப்பதாக தி.மு.க. உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டி பேசிய நேரத்தில், அவை முன்னவர் செங்கோட்டையன் எழுந்து பேசினார்.
அவை முன்னவர்:- உறுப்பினர் ஏற்கனவே நிதி அமைச்சராக இருந்தவர். ஒரு அரசு தேர்தல் நேரத்தில் அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் 5 ஆண்டு இறுதி வரை நிறைவேற்றுவோம். 3 மாதங்களில் ஒரு சரித்திரம் படைக்க இயலாது. அப்படி முடிந்தால் அதை நீங்கள் சொல்லுங்கள்.
ஓ.பன்னீர்செல்வம்:- தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவைகளை புதிய அரசு தங்களுடைய முன்னோடித் திட்டங்களாக அறிவித்திருக்கலாம். அப்படியும் அறிவிக்கவில்லை என்பதுதான் எங்களின் வாதமாக இருக்கிறது. தமிழக மக்கள் ஏமாந்து நிற்கும் எண்ணங்களின் வடிவமாக இருக்கிறது.
அவை முன்னவர்:- தமிழகமே பாராட்டிக்கொண்டிருக்கிற தூய ஆட்சியை, ஏமாற்றத்தை உருவாக்கும் ஆட்சி என்று குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் இடம் மாறியிருக்கிறீர்கள். அதற்காக துதிபாட வேண்டிய அவசியம் இல்லை.
ஓ.பன்னீர்செல்வம்:- அந்த இடத்தை முதலில் மாற்றியவர் அவர்தான் (செங்கோட்டையன்) என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
அமைச்சர் ராஜ்மோகன்:- இடத்தை முதலில் மாற்றியவர் நம்முடைய அமைச்சர் (செங்கோட்டையன்) என்றார். இடத்தை மாற்றியபோதும் இதயத்தின் அருகில் இருந்த நிழற்படத்தை மாற்றவே வேண்டாம் என்று சொன்னவர் எங்கள் தலைவர். ஆனால் நீங்கள் இடமும் மாறியிருக்கிறீர்கள். உங்கள் இதயமும் மாறியுள்ளது.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா:- செங்கோட்டையன் இடம் மாறியிருக்கலாம். ஜெயலலிதாவை இன்னும் இதயத்தில், சட்டப்பையில் வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவால், முதல்-அமைச்சர் ஆக்கப்பட்டவர் இன்று சட்டப்பையில் யாருடைய புகைப்படம் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்.
ஓ.பன்னீர்செல்வம்:- அமைச்சர்களுக்கு பதில் சொல்ல நேரம், காலம் இருக்கிறது. நான் பேசி முடித்தவுடன் நீங்கள் பேசலாம். திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை இதயங்களில் என்றும் கடைசி காலம் வரை வைத்திருப்போம் படத்தை காட்டி ஏமாற்றும் பழக்கம் எங்களுக்கு இல்லை.
இதனையடுத்து அவை முன்னவர் எழுந்து ஒரு கருத்தை முன்வைத்தார். அப்போது தி.மு.க.வினர் எழுந்து அதை நீக்கச் சொல்லி அமளியில் ஈடுபட்டனர். அதனையடுத்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், 'இந்த பிரச்சினையை இதனோடு விட்டுவிட்டு தொடர்ந்து பேசலாம்' என்றார்.
ஓ.பன்னீர்செல்வம்:- என்னோடு நீங்களும், உங்களும் நானும் பயணித்திருக்கிறேன். நான் எப்படிப்பட்டவன் என்று உங்களுக்கு 100-க்கு 200 சதவீதம் நன்றாக தெரியும். எந்த நிலையிலும் மாற மாட்டேன். திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாகத்தான் என்னுடைய நிலை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும். அமைச்சர்கள் படத்தை வைத்திருக்கிறீர்களே என்று சொல்வதெல்லாம் தவறு.
அவை முன்னவர்:- என்னை பொறுத்தவரையில் படத்தை வைத்திருப்பதை பற்றி நான் பேசவில்லை. படத்தை வைத்துக்கொண்டு ஏமாற்றாதீர்கள் என்று நீங்கள் சொல்வதுதான் கொச்சையாக இருக்கிறது. வேடிக்கையாகவும் உள்ளது. நான் ஏமாற்றுகிறேன் என்றால், நீங்களும் ஏமாற்றுகிறீர்கள் என்று அர்த் தமா?.
சபாநாயகர்:- தனிப்பட்ட விவாதம் வேண்டாம். இருபக்கமும் சொல்லப்பட்ட கருத்துக்களை நகைச்சுவையாகவும், நயமானதாகவும் ஏற்றுக்கொள்ளுங்கள். அதை விட்டுவிடுங்கள்.
தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், சட்டைப்பையில் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்திருப்பதற்கு என்பதற்கு விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சட்டமன்ற உறுப்பினராக நின்றுகொண்டிருப்பதற்கு காரணம், திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக இன்று வீற்றிருக்கிற கடந்த 5 ஆண்டுகாலம் தமிழகத்தின் உரிமைகளை எந்நாளும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று ஆட்சியிலும், கட்சியிலும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிற முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கத்தான் அவருடைய புகைப்படத்தை இதயப்பக்கத்தில் இருக்கும் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்.
பட்ஜெட் ஏமாற்றத்தின் வடிவமாக இருக்கிறது. திருப்புகின்ற பக்கமெல்லாம் திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்கள்தான் ஜொலித்து கொண்டிருக்கிறது. மக்கள் மன தில் நிலைகொண்டுள்ள மு.க.ஸ்டாலின் உருவாக்கிய திட்டங்களே புது உருக்கொண்டு நிற்கின்றன. தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, உரிமைத்தொகை உயரவில்லை. ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் வரும் என நம்பிய மகளிர் ஏமாந்து நிற்கிறார்கள். நாடே திரும்பி பார்த்த விடியல் பயணம் திட்டத்தை விரிவுபடுத்தி எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்றநிலையை ஏற்படுத்துவீர்கள் என்பதையும் ஏமாற்றிவிட்டீர்கள்.
நிதி, அதிகாரப்பகிர்வு தி.மு.க. தொடர்ந்து முன்வைக்கும் உயிர் கொள்கைகள். அதைத்தான் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று அண்ணா விதைத்தார், கலைஞர் ஆழமாக வளர்த்தார். மு.க.ஸ்டாலின் சமரசம் இல்லாமல் போராடிக் கொண்டு வருகிறார். தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஆனால் நிதி பகிர்வு போதுமானதாக இல்லை என்ற உண்மையை கூட பட்ஜெட்டில் சுட்டிக்காட்டவில்லை. பட்ஜெட்டில் அறிவிப்புகள் அதிகம், ஆனால் செயலாக்கத்துக்கான முதலீடுகள் குறைவு என்பதே பட்ஜெட்டின் உண்மை முகம்.
திராவிட மாடல் திட்டங்களை கடக்க முடியாது. மக்கள் நலனில் மு.க.ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதுதான் பட்ஜெட்டில் புலப்படும் உண்மைத் தன்மை. திராவிட மாடல் திட்டங்களின் மறுபதிப்புதான் இந்த அரசின் முதல் பட்ஜெட்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.