தமிழக செய்திகள்

கர்நாடகாவைச் சார்ந்தவரை, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்? - வேல்முருகன்

தமிழ்நாடு அரசு இந்தச் சர்ச்சைக்குரிய நியமனத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கர்நாடகாவைச் சார்ந்தவர் பிரதிநி

ஜனநாயகன்' திரைப்படத் தயாரிப்பாளர் கே. வெங்கட் நாராயணா, டெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பது, தமிழக மக்களிடையே பெரும் ஐயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், கர்நாடக முதல்-அமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் அங்கிருக்கும் அரசியல், தொழில் வட்டாரங்களுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டவர் என்று கூறப்படும் நிலையில், இந்த நியமனம் சனநாயக நம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி என்பது வெறும் அலுவல் சார்ந்த பதவி மட்டுமல்ல, அது இந்தியாவின் அதிகார மையத்தில் ஒட்டுமொத்தத் தமிழர்களின் குரலைத் தடையின்றி ஒலிக்கச் செய்யும் மிக முக்கியப் பொறுப்பாகும்.

பல்வேறு சவால்கள்

தற்போதைய சூழலில், காவிரி நீர்ப் பகிர்வு, மேகதாது அணைப் பிரச்சினை மற்றும் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் போன்ற நீர் உரிமைகளும், மொழி உரிமை, முறையான நிதிப் பகிர்வு, மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாத்தல் போன்ற மாநில உரிமைகளும் எனத் தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பல்வேறு சவால்கள் நமக்கு முன்னால் உள்ளன.

இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில், தமிழகத்தின் சார்பில் டெல்லியில் பேசும் ஆளுமையின் மீது சிறிதளவும் சந்தேகம் எழக் கூடாது. "மேகதாது அணையை எந்தச் சூழ்நிலையிலும் கட்டியே தீருவோம்" என்று கர்நாடக அரசுத் தொடர்ந்து ஒற்றைக்காலில் நிற்கும் வேளையில், அந்த மாநில அதிகார மையங்களுடன் நெருங்கியத் தொடர்பில் உள்ள ஒருவரைத் தமிழகத்தின் முகமாக டெல்லிக்கு அனுப்புவது, நம் அரசின் உறுதியான நிலைப்பாட்டின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இப்பதவியில் இருப்பவர் எந்தவொரு வெளிமாநிலத் தாக்கத்திற்கும் ஆட்படாதவராகவும், முரண்பாடுகளுக்கு இடம் தராமல் தமிழ்நாட்டின் நலனை மட்டுமே தனது ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படுபவராகவும் இருக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும்.

ரத்து செய்க..

எனவே, தமிழக மக்களின் நியாயமான அச்சங்களையும், அரசியல் ரீதியான சந்தேகங்களையும் அலட்சியப்படுத்தாமல், இந்தச் சர்ச்சைக்குரிய நியமனத்தை, தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்து திரும்பப் பெற வேண்டும்.

பிற மாநில அரசியல் அல்லது தொழில் வட்டாரங்களுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாத, தமிழ்நாட்டின் உரிமைகளில் சமரசமற்றப் பற்றுக்கொண்ட, தமிழகத்தைச் சேர்ந்த நேர்மையான ஒருவரை இப்பொறுப்பில் அமர்த்த வேண்டும். காவிரி, மேகதாது உள்ளிட்ட அனைத்து மாநில உரிமைப் போராட்டங்களிலும் தமிழக நலனை மட்டுமே முன்னிறுத்தி, அசைக்க முடியாத மனஉறுதியுடன் டெல்லியில் செயல்படக்கூடிய ஆளுமைக்கே இந்த உயரிய பொறுப்பு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான தருணத்தில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது அரசின் கடமையாகும்.

எனவே, தமிழ்நாடு அரசு இந்தச் சர்ச்சைக்குரிய நியமனத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், நேர்மையும் நம்பகத்தன்மையும் மிக்க, தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டுமே அசைக்க முடியாத உறுதியுடன் செயல்படும் ஒருவரை டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைச் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.