திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பிரபல ரவுடி மரிய அந்தோணியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதன் நேரடியாக வந்து மரிய அந்தோணியை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதேபோல் மரிய அந்தோணி நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் காயம் அடைந்து அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபுவை சந்தித்து ஆறுதல் கூறினார். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணியிடம் சிகிச்சை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு மதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மரிய அந்தோணி மீது 2 கொலை வழக்கு உள்பட 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மாதம் 12-ந் தேதி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கில் மரிய அந்தோணியை கைது செய்வதற்காக சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
திருச்செந்தூர் அருகே சோனகன்விளை காணியாளர்புதூர் பகுதியில் உள்ள வீட்டில் மரிய அந்தோணி இருப்பது தனிப்படை போலீசுக்கு தெரியவந்தது. இதனால் போலீசார் அவரை கைது செய்ய முறையான நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, மரிய அந்தோணி தான் மறைத்து வைத்து இருந்த நாட்டு துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டார். மேலும் கத்தியாலும் தாக்கி உள்ளார்.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ பிரபுவுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் தனது உயிரை பாதுகாக்க தற்காப்புக்காக, சட்டம் அளித்து இருக்கும் அனைத்து அதிகாரத்துக்கு உட்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ பிரபு தனது துப்பாக்கியால் ஒரு முறை சுட்டு உள்ளார். இதில் மரிய அந்தோணி வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது.
உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, காயம் அடைந்த மரிய அந்தோணி ஆகியோர் 108 ஆம்புலன்சு மூலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக 2 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் 2 பேரும் நலமுடன் உளளனர். இந்த சம்பவத்தில் மரிய அந்தோணிக்கு நாட்டு துப்பாக்கி எப்படி கிடைத்தது? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.