சென்னை,
தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தன்னை நிர்பந்தப்படுத்தி முடிவு எடுக்க வைக்க முடியாது என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஆவேசமாக தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றம் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து, த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கரவொலியுடன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது உரையை தொடங்கினார்.
அப்போது பேசுகையில், தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்பது, பெண்கள் பாதுகாப்பு, காவல் மரணங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான கருத்துகளை அனுமதிக்க மாட்டோம் என்றும், தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை சரியாக செய்யும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக ஆபாச நதியாக, வன்ம நதியாக ஓடுகிறது. இங்குள்ள ஒரு உறுப்பினர், எலும்பை உடைப்பேன் என்று பேசுகிறார். அவர் என்ன ஆர்த்தோ டாக்டரா? தி.மு.க.வுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவு வராது என ஒருவர் பேசுகிறார். இப்படி பேசியதால்தான், இவர்கள் எதிர்கட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பை கொஞ்சமாவது மதிக்க வேண்டும்” என்று விமர்சித்தார்.
சர்க்காரியா கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டி பேசிய முதல்-அமைச்சர் விஜய், தி.மு.க. ஆட்சியில் வீராணம் குழாய் திட்டத்துக்கு டெண்டர் வழங்க லஞ்சம் பெறப்பட்டதாக தெரிவித்தார். மேலும் முரசொலி கட்டிடத்துக்கு கமிஷன் வாங்கியுள்ளனர் என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருப்பதாகவும், சத்யநாராயணா பிரதர்ஸ்க்கு டெண்டர் கொடுப்பதற்காக கருணாநிதி தனது முதல்-அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும் விஜய் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கட்சி நிதி குறித்து பேசிய முதல்-அமைச்சர் விஜய், “தி.மு.க. 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை கட்சி நிதி வாங்கியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அதன் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. டாஸ்மாக்கை கையில் வைத்திருந்த அமைச்சருடன் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இதில் சிக்கியுள்ளனர். செந்தில் பாலாஜியின் சகோதரர் குறித்தும் அமலாக்கத்துறை சொல்லியுள்ளது. பார்ட்டி பண்ட்(கட்சி நிதி) வாங்கியதில் முக்கிய நபர்கள் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அமலாக்கத்துறை கூறியுள்ளது.
தி.மு.க. இருக்குமிடத்தில் ஊழல் இருக்காது என அவர்கள் கூறுகின்றனர். நான் கூறுகிறேன். தி.மு.க. இருக்குமிடத்தில் ஊழல்கள் இருக்கும். ஊழல்கள் இருக்குமிடத்தில் தி.மு.க. இருக்கும். ஊழல் என்று சொன்னாலே தி.மு.க.வினர் எழுந்திரிப்பார்கள். ஊழல் செய்யவில்லை என்று அவர்களால் கூற முடியுமா?
மிசாவை பார்த்தவர்கள், மிசாவை பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள். மிசாவை பற்றிய வரலாறு எனக்கும் தெரியும். சட்டம், ஒழுங்கு பற்றி பேசுவதற்கு முன் உங்கள் ஆட்சியில் நடந்ததை கண்ணாடியில் பார்ப்பது நல்லது” என்று ஆவேசமாக பேசினார்.
இதனிடையே முதல்-அமைச்சர் தனது பதிலுரையை வழங்கிக் கொண்டிருக்கும்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் எழுந்து நின்று முதல்-அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பேச அனுமதி வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டமன்றத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. கடும் அமளிக்கு இடையே காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீதான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன்பு அமர்ந்தவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். அவர்களை தங்கள் இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து முழக்கமிட்ட நிலையில், ‘உங்கள் மிரட்டல்களுக்கெல்லாம் அடிபணிய முடியாது. பேசுவதற்கு அனுமதி தரமுடியாது. விதிகளை மீறி நடந்து கொள்பவர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்படுவார்கள்” என்று கடுமையாக எச்சரித்தார்.
மேலும், “விதிகளுக்கு உட்பட்டு உங்கள் விளக்கத்தை நீங்கள் அளிப்பதற்கான வாய்ப்புகள் எல்லாம் இருந்தன. ஆனால் அந்த வாய்ப்புகளை நீங்கள் இழந்துவிட்டீர்கள். இந்த அவையில் முதல்-அமைச்சர் பேசும்போது ஆரம்பத்தில் இருந்து கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தியது தவறு. உங்கள் போஸ்டர்களை கொண்டு வந்து காண்பிக்கும் இடம் இதுவல்ல. இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்றார்.
அப்போது முதல்-அமைச்சர் விஜய் எழுந்து, “அவர்கள் பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள்” என்று சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம், ‘முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுவதற்கு அனுமதி தருகிறேன். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உங்கள் இருக்கைகளில் சென்று அமருங்கள்’ என்றார். இதன்படி அனைவரும் தங்கள் இருக்கைகளில் சென்று அமர்ந்தனர்.
அப்போது சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “இதைத்தான் முதலிலேயே நான் செய்வதாக இருந்தேன். முதல்-அமைச்சர் பேசியபோது நீங்கள் அமைதியாக இருந்து அவரது பேச்சைக் கேட்டிருந்தால், நீங்கள் பதில் சொல்ல அனுமதி வழங்கியிருப்பேன். முதல்-அமைச்சர் எப்போது பதில் சொல்வார் என்று கேட்டவர்கள் இன்று அவர் தனது பதிலுரையை வழங்கியபோது அதனை முழுமையாக கேட்டிருக்க வேண்டும்.
உங்கள் நோக்கம் அவரது பேச்சு வெளியே போகாமல் தடுக்க வேண்டும் என்பதாக இருந்திருந்தால், அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. நீங்கள் அலுத்துப் போகும் வரை குரல் கொடுத்தீர்கள், ஆனால் முதல்-அமைச்சர் தனது பேச்சை முழுமையாக நிறைவு செய்துள்ளார். இப்போது எதிர்க்கட்சி தலைவரை பேச நான் அனுமதிக்கின்றேன்” என்றார்.
ஆனால் அவர் பேசிக் கொண்டிருக்கும்போது மீண்டும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ஆவேசமான சபாநாயகர், “இப்படியெல்லாம் எழுந்து நிர்பந்தப்படுத்துவதை என்னால் அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எனது முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நான் இப்போது அனுமதிப்பதாக இல்லை” என்று உறுதியாக தெரிவித்தார்.