தமிழக செய்திகள்

அவசர அவசரமாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டது ஏன்? - ஜெயக்குமார் கேள்வி

அரசின் செயல்பாடுகள் அனைத்தும் கேள்விக்குறியாகவே உள்ளது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

வெள்ளை அறிக்கை மூலம் மக்களை ஏமாற்றாமல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். 18-ம் தேதி சட்டமன்றம் கூடும் நிலையில் அவசர அவசரமாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டது ஏன்?. தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவா?

மாற்றத்தை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த தமிழக மக்களுக்கு தவெக அரசின் மீது உண்டான வெறுப்பை திசை திருப்பவா? அல்லது, இந்த வெற்று (வெள்ளை) அறிக்கையின் மூலம் அள்ளிக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மறைமுகமாக தமிழக மக்களுக்கு தெரிவிக்கிறாரா முதல்-அமைச்சர்?.

திமுக அரசால் உருவாக்கப்பட்ட நிதிச்சுமையை சுட்டிக்காட்டுவதை தாண்டி, அதை சரி செய்வதற்கு தங்களிடம் இருக்கும் வழிகள் என்ன?. கடன் வாங்குவதை தொடர்ந்தபடியே நிதி நிலைத்தன்மையை உறுதி செய்ய உங்களிடம் உள்ள திட்டம் என்ன?. தொடர்ந்து திமுக வின் தவறுகளுக்குள் ஒளிந்து கொள்ளாமல் மக்களுக்கான அரசியலை செய்யுங்கள். ஆச்சரியக்குறி என்று சொல்லி கொள்ளும் அரசின் செயல்பாடுகள் அனைத்தும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.