விருதுநகர்,
எனது பெயரை ஏன் முதலில் போடவில்லை என கலெக்டரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்வி எழுப்பினார்.
விருதுநகரில் விளையாட்டுத்துறை சார்பில் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பெயர் முதலில் இருந்தது. 2-வதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயர் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற நிலையில், தன்னுடைய பெயர்தானே பேனரில் முதலில் இருக்க வேண்டும், ஏன் அமைச்சர் கீர்த்தனாவின் பெயரை முதலில் வைத்தீர்கள் என்று விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வந்த மாவட்ட கலெக்டர் சுகபுத்ராவிடம் கேள்வி எழுப்பினார்.
கலெக்டரிடம் அமைச்சர் கூறுகையில், “பொதுவாக ஒரு மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் பொறுப்பு அமைச்சர் யாரோ அவர்கள் பெயரை தான் முதலில் போட வேண்டும். இந்த மாவட்டத்திற்கு நான் தான் பொறுப்பு அமைச்சர் என்பதால் எனக்கு தான் முதலில் மரியாதை கொடுக்க வேண்டும்” என கூறினார். இதனால் நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.