நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
பரவலாக மழை
தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை லேசான மழையுடன் தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
வடக்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதையொட்டிய பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இது 20-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். 21-ந்தேதி புயலாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
அம்பை
இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. நெல்லையில் நேற்று காலை சிறிது நேரம் வெயில் அடித்தது. பின்னர் மேக கூட்டங்கள் சேர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. மதிய நேரத்தில் கே.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்தது.
இதே போல் டவுன், சந்திப்பு, கொக்கிரகுளம், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்திலும் நேற்று அம்பை, சேரன்மாதேவி, நாங்குநேரி, மணிமுத்தாறு, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
மூலைக்கரைப்பட்டியில் நேற்று மதியம் 12 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் முக்கால் மணி நேரம் நீடித்த இந்த மழையால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழை அளவு
நெல்லை மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
அம்பை -12, சேரன்மாதேவி -3, மணிமுத்தாறு -1, நாங்குநேரி -4, பாளையங்கோட்டை -5, பாபநாசம் -16, நெல்லை -2.