லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷாம்புபூர் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் சிங். இவரது மனைவி பபிதா சிங். இவர்களுக்கு லக்கா(வயது 6) என்ற மகனும், பாரி(வயது 5) என்ற மகளும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளனர். அரவிந்த் சிங்கின் தாயார் ஷாம்லா தேவியும் இவர்களது வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், தங்கள் வீட்டில் கடந்த சில காலமாக அமானுஷ்ய நிகழ்வுகள் நடப்பதாகவும், ஆவி, பேய் போன்ற ஏதேனும் தங்கள் வீட்டில் இருக்கலாம் என்றும் அரவிந்த் சிங்கின் மனைவி பபிதா சிங் நம்பியுள்ளார். இதற்காக வீட்டில் பல்வேறு பூஜைகள், சடங்குகளை அவர் செய்து வந்துள்ளார். இதனிடையே, பேய் விரட்டும் சடங்கை செய்வதற்காக பக்கத்து கிராமத்தை சேர்ந்த மஹேந்திர பதாக்(வயது 60) மற்றும் அகிலேஷ் மிஸ்ரா(வயது 55) ஆகிய பூசாரிகளை தனது வீட்டிற்கு பபிதா அழைத்துள்ளார்.
இதன்படி நேற்று பபிதாவின் வீட்டிற்கு வந்த பூசாரிகள், பேயை விரட்டுவதற்கான பூஜைகளை செய்யத் தொடங்கினர். நேற்று மாலை 6 மணியளவில் வீட்டிற்கு வந்த அரவிந்த் சிங், அங்கு நடந்து கொண்டிருந்த பூஜைகள் குறித்து பூசாரிகளிடம் கேள்வி எழுப்பினார். மேலும் அவர்களின் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளார். அப்போது பூசாரிகளுக்கும், அரவிந்த் சிங்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அரவிந்த் சிங், தன்னிடம் இருந்த உரிமம் பெறப்பட்ட துப்பாக்கியை எடுத்து 2 பூசாரிகள் மற்றும் தனது மனைவி ஆகியோர் மீது சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தபோது, அரவிந்த் சிங் தனது 3 குழந்தைகளையும் வீட்டிற்குள் இழுத்துச் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.
இது குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது அரவிந்த் சிங், தன்னிடம் இருக்கும் துப்பாக்கியால் குழந்தைகளை சுட்டுக் கொன்றுவிடப்போவதாக மிரட்டினார். அவரிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அங்கே நிலவரம் மோசமாகிக் கொண்டே சென்றதால், சுமார் 8 காவல் நிலையங்களில் இருந்து போலீஸ் படைகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அரவிந்த் சிங்கின் வீட்டை சுற்றிவளைத்த போலீசார், நள்ளிரவு வரை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அரவிந்த் சிங் போலீசாரை மிரட்டுவதற்காக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அதில் அவரது ஒரு குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது.
போலீசார் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் அரவிந்த் சிங் வெளியே வராத நிலையில், எஸ்.எஸ்.பி. குமார் தலைமையிலான போலீசார், வீட்டிற்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கதவை உடைத்துக் கொண்டு அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அரவிந்த் சிங்கிற்கு படுகாயம் ஏற்பட்டது.
பின்னர் அவரிடம் இருந்து 3 குழந்தைகளையும் மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 2 குழந்தைகள் நலமாக உள்ள நிலையில், மற்றொரு குழந்தையின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாகவும், அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம் அரவிந்த் சிங் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அதிகாலை 3.30 மணிக்கு அரவிந்த் சிங் உயிரிழந்தார். இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.