கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

வேலைக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்த மனைவி: மதுவில் திராவகத்தை கலந்து குடித்து டிரைவர் தற்கொலை

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சந்தைதோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வகணபதி (53 வயது). இவரது மனைவி சாந்தி (42 வயது). டிரைவரான செல்வகணபதி, சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். கடந்த 2 மாதமாக அவர், சரிவர ஆட்டோ ஓட்டாமல், மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சாந்தி, வேலைக்கு செல்லாமல் இருந்தால் மகன் படிப்பு செலவுக்கு என்ன செய்வது என்று கேட்டு, அவருடன் சண்டை போட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த செல்வகணபதி, மதுவில் திராவகத்தை கலந்து குடித்து விட்டார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று செல்வகணபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்கு செல்லாமல் இருந்ததை மனைவி கண்டித்ததால் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.