வேலூர்,
ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 29). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது அவர் தங்கி இருந்த வீட்டின் அருகே வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் உள்ள மேல்பள்ளிபட்டு கிராமத்தை சேர்ந்த மோனிஷா (23) என்ற பெண்ணை காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி மனைவி மற்றும் குழந்தைகளை மேல்பள்ளிப்பட்டு அருகே உள்ள எல்லையம்மாள்குட்டை பகுதியில் உள்ள வீட்டில் விட்டு விட்டு பெங்களூரு சென்று கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.
வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை ஊருக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவும் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மோனிஷா, குழந்தைகளுடன் சாப்பிட்டு வெளியில் தூங்க சென்றுள்ளார். கிருஷ்ண மூர்த்தி அறைக்குள் சென்று தூங்கி உள்ளார்.
அதிகாலையில் கிருஷ்ணமூர்த்தி ரத்த வாந்தி எடுத்திருப்பதாக, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்சை வரவழைத்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஆம்புலன்சில் வந்த மருத்துவ பணியாளர் கிருஷ்ணமூர்த்தியை பரிசோதனை செய்ததில் அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.
மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் மற்றும் போலீசார் கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணமூர்த்தியின் தந்தை ராஜேந்திரன் தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது எனவும், இதுகுறித்து தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தார்.
அதன்பேரில் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன், லத்தேரி இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கிருஷ்ணமூர்த்தியின் மனைவி மோனிஷா, அவரின் தந்தை சிவாஜி, தாய் செல்வி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மோனிஷா கூறியதாவது:-
எனது கணவர் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வந்தார். வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வருவார். சமீபத்தில் 4 மாதமாக இங்கேயே தங்கி விட்டார். அடிக்கடி குடித்து விட்டு வருவார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று இரவும் குடித்து விட்டு வந்து என்னை தகாத வார்த்தைகளால் பேசி, என்னிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் 2 பேருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் அவர் உள்ளே சென்று தூங்கி விட்டார். சிறிது நேரத்தில் நான் உள்ளே சென்று கயிற்றால் அவரின் கழுத்தை இறுக்கினேன். இதில் அவர் ரத்தவாந்தி எடுத்தார். 108 ஆம்புலன்ஸ்சில் வந்தவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் மோனிஷாவை மகளிர் போலீஸ் நிலையத் திற்கு அழைத்து சென்று அவர் தனியாக கொலை செய்தாரா? அல்லது வேறு யாராவது உதவியுடன் கொலை செய்தாரா? உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.