நல்லம்பள்ளி,
தர்மபுரி அருகே சொத்து தகராறில் இரட்டை கொலை நடந்தது அம்பலமாகிய உள்ளது. இது தொடர்பாக சித்தி மற்றும் கணவனை கூலிப்படையை ஏவி தீர்த்து கட்டிய மனைவி உள்பட 8 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே எர்ரப்பட்டியை சேர்ந்தவர் நஞ்சம்மாள் (வயது 45). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவரது தம்பி மாதேஷ் (40). லாரி டிரைவர். இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
மேலும் தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-
டிரைவர் மாதேசுக்கு நாகம்மாள் (50), நஞ்சம்மாள் ஆகிய 2 அக்காள்கள். இதில் நாகம்மாள் மகள் கீதா (33) என்பவரை மாதேஷ் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கீதா கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். மாதேஷின் குழந்தைகளை நஞ்சம்மாள் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் இவர்களுடைய குடும்பத்திற்கு சொந்தமான பூர்வீக சொத்தை ரூ.70 லட்சத்திற்கு விற்று உள்ளனர். அந்த தொகையை குடும்பத்தினர் 6 பங்காக பிரித்துள்ளனர். அதில் தனக்கு கொடுக்கப்பட்ட பணத்தை மாதேஷ், தனது அக்காள் நஞ்சம்மாளிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் தனக்கு சொந்தமான மற்றொரு நிலத்தையும் விற்று உள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த கீதா, கணவரிடம் தகராறில் ஈடுபட்டார். சொத்தை விற்ற பங்கில் வந்த பணத்தை மாதேஷ், அக்காள் நஞ்சம்மாளிடம் கொடுத்து விட்டதால் ஆத்திரமடைந்த கீதா 2 பேரையும் தீர்த்து கட்ட திட்டமிட்டார். அப்போது கீதா தனது தோழியின் அண்ணனான பொம்மிடி பகுதியை சேர்ந்த சண்முகம் (39) என்பவருடன் அறிமுகமாகி உள்ளார். அவரிடம் தனது குடும்பத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து கீதா கூறியுள்ளார்.
அப்போது தனக்கு கூலிப்படையுடன் தொடர்பு இருப்பதாக கூறிய சண்முகம், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த கூலிப்படையினரை கீதாவிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது தனது கணவர் மற்றும் சித்தியை கொலை செய்ய ரூ.6 லட்சம் தருவதாக கீதா கூலிப்படையினரிடம் கூறியதாக தெரிகிறது.
அதன்படி கூலிப்படையினர் கடந்த 2 வாரங்களாக அந்த பகுதியில் நோட்டமிட்டு உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மாதேஷ் மற்றும் நஞ்சம்மாள் ஆகிய 2 பேரையும் கூலிப்படையினர் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இந்த இரட்டை கொலை திட்டத்தை நிறைவேற்ற கீதா தனது உறவினரான பொன்னியம்மாள் (61) என்பவரிடம் பணத்தை கொடுத்ததும், அந்த பணம் வங்கி கணக்கு மூலம் கூலிப்படையினரின் வங்கி கணக்குகளுக்கு சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கீதா, உறவினர் பொன்னியம்மாள், மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த கூலிப்படையினர் ஹரி ராமச்சந்திரன் (36), ஆறுமுகம் (40), ரங்கநாதன் (33), சந்துரு (26), கோபிநாத் (40) கூலிப்படையை ஏற்பாடு செய்த சண்முகம் ஆகிய 8 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.