மயிலாடுதுறை,
மனைவியின் தகாத உறவால் தச்சுத்தொழிலாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது மனைவியின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள வேட்டங்குடி கிராமம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 44). தச்சுத்தொழிலாளியான இவருக்கும், மயிலாடுதுறையை சேர்ந்த துர்காதேவி (41) என்பவருக்கும் 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் தனது ஊரான வேட்டங்குடிக்கு திரும்பி வந்தார்.
இந்த நிலையில் அதே கிராமத்தில் வெங்கடேசன் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாலகுருவுக்கும் (40), வெங்கடேசன் மனைவி துர்கா தேவிக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்தது. இவர்களது தகாத உறவு வெங்கடேசனுக்கு தெரிய வந்தது.
இதனால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு துர்காதேவியை வெங்கடேசன் திட்டினார். இதில் கோபித்துக்கொண்டு மயிலாடுதுறை அருகே உள்ள சோழ சக்கரநல்லூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு துர்காதேவி சென்று விட்டார்.
துர்காதேவி தனது தாய் வீட்டிற்கு சென்ற பிறகும் பாலகுரு அவருடன் தொடர்ந்து பேசி உறவு வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெங்கடேசன் நேற்று முன்தினம் தனது வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் அவர் இறப்பதற்கு முன்பு செல்போன் வாட்ஸ் அப்பில் தனது சாவுக்கு பாலகுரு தான் காரணம் என்றும் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை தற்கொலைக்கு தூண்டியதாக பாலகுருவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான துர்காதேவியை தேடி வருகின்றனர்.