தமிழக செய்திகள்

சுற்றுலா வாகனங்களை விரட்டி தாக்கிய யானை: பயணிகள் அச்சம்

சுற்றுலா வாகன டிரைவர் சாமர்த்தியத்துடன் செயல்பட்டதால், அந்த வாகனத்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பி பிழைத்தனர்

நீலகிரி மாவட்டம் மாவட்டத்தின் முக்கிய வனப்பாதைகளில் மாயார் சாலை குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த வழியாக ஒரு சுற்றுலா வாகனம் ஏராளமான பயணிகளுடன் புறப்பட்டு வந்தது.அப்போது வனத்தில் இருந்து நீண்ட தந்தங்களுடன் கூடிய ஒரு யானை திடீரென சாலைக்கு வந்தது. பின்னர் அந்த யானை சுற்றுலா வாகனத்தை நோக்கி ஆக்ரோஷத்துடன் விரைந்து வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் வேகமாக வண்டியை இயக்கினார். அப்போது அந்த யானை வாகனத்தின் பக்கவாட்டு பகுதியை பலமாக தாக்கியது. இதனால் வண்டிக்குள் இருந்த பயணிகள் பயத்துடன் அலறினர். இந்த நேரத்தில் டிரைவர் வண்டியை வேகமாக இயக்கிச் சென்றார்.

சுற்றுலா வாகன டிரைவர் சாமர்த்தியத்துடன் செயல்பட்டதால், அந்த வாகனத்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பி பிழைத்தனர்.மேலும் அந்த யானை சுற்றுலா வாகனம் மட்டுமின்றி, அந்த வழியாக வந்த மற்ற வாகனங்களையும் துரத்தியது. இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. ஒருசில வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், மலைப்பாதைகளில் காலை, மாலை நேரங்களில் வனவிலங்குகள் சாலைக்கு அருகில் வர வாய்ப்பு அதிகம். எனவே அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும்.

வனப்பாதைகளில் வேகமாக வாகனம் ஓட்ட வேண்டாம். விலங்குகளை பார்த்தால் வாகனத்தை நிறுத்திவிட்டு அமைதியாக இருக்க வேண்டும். ஹாரன் அடிக்கவோ, பிளாஷ் லைட் பயன்படுத்தவோ கூடாது. மேலும் வனத்துறையின் வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.