அம்மாபேட்டை,
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டி வனச்சரகத்தில் யானைகள், சிறுத்தைப்புலி, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் காணப்படுகின்றன. சென்னம்பட்டி அடுத்துள்ள சித்தகவுண்டனூர் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது வாழை, குச்சிக்கிழங்கு, நிலக்கடலை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் சித்தகவுண்டனூர் பகுதியை சேர்ந்த சின்னசாமி (வயது 49) என்ற விவசாயி 2 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனால் சின்னசாமி தோட்டத்துக்கு ஓடிச்சென்று பார்த்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு காட்டு யானை வாழைகளை மிதித்து சேதப்படுத்துவது தெரிந்தது. இதை கண்டதும் அவர் அக்கம் பக்கத்து தோட்டத்து விவசாயிகளுடன் சேர்ந்து தீப்பந்தம் காட்டி யானை விரட்ட முயன்றார். அப்போது விவசாயிகளை நோக்கி யானை ஓடிவந்தது. இதனால் உயிர் தப்பிக்க அனைவரும் ஓடினார்.
அதன் பின்னர் யானை அங்கிருந்து மாதேஷ் (42), நகலடி பெரியசாமி (55) ஆகியோருடைய தோட்டங்களில் புகுந்து வாழைகளை மிதித்தும், தண்ணீர் பாய்ச்சும் குழாய்களை உடைத்தும் சேதப்படுத்தியது. தொடர்ந்து விவசாயிகள் விரட்டும் பணியில் ஈடுபட்டதால் அதிகாலை 3 மணி அளவில் யானை அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றது.