தமிழக செய்திகள்

பவானிசாகர் அருகே தோட்டங்களுக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

விடிய, விடிய முயற்சி செய்தும் யானை வனப்பகுதிக்குள் செல்லவில்லை.

பவானிசாகர்,

பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் ஏராளமான யானைகள், மான்கள், குரங்குகள், சிறுத்தைப்புலிகள், காட்டுப்பன்றிகள் உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள தோட்டங்கள் மற்றும் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை பவானிசாகர்- மேட்டுப்பாளையம் சாலையை கடந்து புஞ்சைபுளியம்பட்டி-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக நள்ளிரவில் காவிலிபாளையம் அருகே உள்ள வாணிச்சிபாளையம், தொட்டிபாளையம், கொண்டையம்பாளையம் கிராமங்களில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்தது.

காட்டு யானை அட்டகாசம்

தொடர்ந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் தென்னை மரங்களை காட்டு யானை சேதப்படுத்தியது. மேலும் தோட்டங்களை சுற்றி போடப்பட்டு இருந்த கம்பி வேலிகளை சேதப்படுத்தியது. இதுகுறித்த தகவல் அறிந்து வந்த பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனத்துறையினர் சைரன் ஒலி எழுப்பியும், பட்டாசு வெடித்தும் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். விடிய, விடிய முயற்சி செய்தும் யானை வனப்பகுதிக்குள் செல்லவில்லை.

தொடர்ந்து அதிகாலையில் அருகே உள்ள காவிலிபாளையம் குளத்துக்கு வந்த யானை குளத்தில் உள்ள தண்ணீரில் விளையாடி கொண்டு இருந்தது. இதையடுத்து அங்குள்ள புதருக்குள் சென்று யானை மறைந்தது. யானையை காட்டுக்குள் விரட்ட டிரோன் கேமரா உதவியுடன் வனத்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.